மாட்டு வண்டி பாதையிலே
தென்றலின் தலைவாசல் பாம்புக்கோவில் சந்தை, குற்றாலத்திற்க்கு ரயிலில் வருபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.
பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்துக்குள்ள வண்டி வரும் பொழுது தென்றல் நம்மை வரவேற்க்கும்.
மெல்லிய தூறலும், ஜிலுஜிலு காற்றுடன் இதமான காலையாக இருந்தது அந்த காலை நேர பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம்.
பாம்புக்கோவில் சந்தையில் ரயில் இரண்டு நிமிடம் மட்டும் தான் நிற்க்கும். எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இறங்கினார் ஜெயச்சந்திரன்
அவர் பின்னாலே இறங்கிய உமா
"சித்தப்பா போயிட்டு வரேன்"என்றார்.
"சரி" என்ற ஒற்றை வார்த்தையில் விடைகொடுத்தார் ஜெயச்சந்திரன்.
சொந்த பெரியா மகன் புள்ள, அனந்தர சொக்காரன் மகா. அப்படியிருந்தும் நின்று பேச நேரம் இல்லாதது போல் வேகமாக வெளியே நடந்தார் ஜெயச்சந்திரன்.
உண்மையிலே நேரம் இருந்தாலும் அவர் இப்படித் தான் செய்வார். இது அவர் குணநலம்,
வாழ்க்கை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என எண்ணுபவர். இது தான் தனி மனிதனுடைய வெற்றிக்கான பார்முலா என்று வாழ்ந்து வருபவர்.
"நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை பற்றி அசை போட்டால் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்" என்று தனது வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார்.
ஊரை விட்டுப் போய் சென்னையில் செட்டில் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது, இந்த இருபத்தைந்து ஆண்டில் இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து இருப்பார்.
ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் அரியநாயகிபுரம். ஆனால் அவர் வளர்ந்தது புளியங்குடியில்.
அவரது தந்தை காலமான பின்பு அவர் பார்த்த போஸ்ட் ஆபீஸ் வேலை அவர் அம்மாவுக்கு புளியங்குடியில் கிடைத்ததால். கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டு காலம் புளியங்குடியில் படித்தார் வளர்ந்தார்.
அவரது சொந்தக்காரர்களையோ, தெரிந்த நபர்களோ சென்னையில் வைத்துப்பார்த்தால். அவர்களை கண்டும் காணாததுபோல் சென்று விடுவார். உறவினர்களின் வீட்டின் எந்த நல்லது கெட்டதுக்கும் வருவதில்லை.
ஒரு கால கட்டத்தில் உறவினர்கள் இவரை கண்டு கொள்வதில்லை. அதற்காக இவர் வருந்தியதுமில்லை.
இந்த வாழ்வியல் தான் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததாக நினைத்ததார்,
அவர் வாழ்க்கை பொருத்த வரை அது உண்மையாகவே இருந்தது. சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் போராட்டத்தால் வளர்க்கப்பட்ட ஜெயச்சந்திரன். இன்று மிகப்பெரிய கணினி நிறுவனத்தை நடத்துகிறார் என்றால் ஒருவேளை அவர் நம்பிய வாழ்வியலாக கூட இருக்கலாம்.
அவரது வாழ்வியல் குறுகிய வட்டமாக இருந்தாலும், இராமையா நாடார் மகன் சுப்பிரமணியனின் நட்பை மட்டும் இன்று வரை தொடர்ந்து வைத்திருக்கிறார் ஜெயசந்திரன். அதற்க்கு காரணம் ராமையா நாடார்.
கொஞ்ச வயசுல புருஷன இழந்து கஷ்டத்துடன் புளியங்குடிக்கு வந்த தனது தாயுக்கும், தனக்கும் தங்க வீடு கொடுத்து ஆதரித்தது இராமையா நாடார் வீட்டார்கள்,
பெரிய சம்சாரி வீடு. ஏகப்பட்ட நிலம், இறவ கிணறுக உண்டு. பத்திருபது மாடுகள் தொழுவுல இருக்கும். தொழுவுல சின்ன ரூம் உண்டு, அதில் தான் ஜெயசந்திரனும் அவர் அம்மாவும் குடியிருந்தார்கள்.
அந்த காலத்தில போஸ்ட் ஆபிஸ்ல பெரிய சம்பளம் கிடையாது,
கடன்னு போய் கேட்டால் அள்ளி கொடுப்பார். "நீ மெதுவா கொடுத்தால் போதும் தாயி" என்பார். ஜெயசந்திரனின் அம்மாவுக்கு கூட பொறக்காத அண்ணனா இருந்தார்.
சுப்பிரமணியன் ஒன்னாப்புல இருந்து பனிரெண்டு வரைக்கும் ஜெயசந்திரனுடன் ஒன்றாக படித்தார்.
புளியங்குடி வேதக்கோவில் தெருவில் ஒரு வீட்டை ஜெயச்சந்திரனின் அம்மா ஜெயசந்திரன் பெயரில் வாங்கியிருந்தார். அதை விற்க்க தான் புளியங்குடி வருகிறார்.
வீடு சுப்பிரமணியன் கஸ்டடியில் தான் இருக்கு, வீட்டை விற்க்க அவர் தான் ஏற்ப்பாடு செய்திருந்தார். ஜெயசந்திரனை அழைத்து வர தனது காரை அனுப்பியிருந்தார் சுப்பிரமணியன்.
"சார் நீங்க தான ஜெயச்சந்திரன்" எனக்கேட்டான் டிரைவர் கணேசன். அவனிடமும் "ஆம்"என்ற ஒற்றை வார்த்தையில் தான் பதில் சொன்னார்.
"சார் காத்து சூப்பரா இருக்கு, A/C போடனுமா" என்றான் கணேசன்."ம்" என்ற ஒற்றை எழுத்தில் பதில் சொன்னார் ஜெயசந்திரன்.
ம்ன்னு சொன்னது போடுன்னா இல்லை போட வேண்டாம்னான்னு புரியாத கணேசன், கண்ணாடியை ஏற்றி விட்டு
A/Cயை போட்டான்.
கிட்டதட்ட இருபது ஆண்டுகள் கழித்து புளியங்குடி வருகிறார். இந்த இருபது ஆண்டில் வியக்க தக்க பரிமாணத்தை கண்டிருந்தது புளியங்குடி.
ஆனால் எந்த சலனுமும் இன்றி தனது லேப்டாப்பில் மூழ்கியவாறு இருந்தார் ஜெயசந்திரன். அவர் பார்வை ஜன்னலை தாண்டவில்லை. வண்டி புளியங்குடி ஹை ஸ்கூல் அருகில் வந்தது.
"சார் நம்ம ஊர் ஸ்கூல பார்த்தீர்களா, இப்ப எவ்வளவு பெருசா வளர்ந்திருக்கு பார்த்தீர்களா, நீங்க இங்க தான படிச்சிகளாம்" என்றான்.
அவன் வார்த்தைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் லேப்டாப்பில் புதைந்து கிடந்தார்.
"என்ன மனுசன்னு தெரியல, இத்தனை வருஷம் கழிச்சி வாழ்ந்த ஊருக்கு வாராரு, எதையும் பார்க்காமல் லேப்டாப்ப பார்த்துக்கிட்டு வாராரே".மனதிற்க்குள் புலம்பினான் கணேசன்.
"சார் வீடு வந்திருச்சி" என்ற கணேசனின் வார்த்தையால் லேப்டாப்பிலிருந்து விடுபட்டார் ஜெயசந்திரன்.
"வாங்க அண்ணாச்சி, திடீர்ன்னு தேங்கா வெட்ட ஆள் வந்துட்டாங்க அதான் போயிருக்கார். செத்த நேரத்தில வந்திருவார். ஒரு நிமிஷம் இருங்க காபி போட்டு தாரோன்" என்றாள் சுப்பிரமணியன் மனைவி பொற்க்கொடி.
"அதெல்லாம் வேண்டாம்பா நான் பல் தேய்க்காமல் காபி குடிக்க மாட்டேன்" என்றார் ஜெயசந்திரன்.
"ஏலே அசோக் அண்ணாச்சிய மாடி ரூமுக்கு கூட்டிட்டு போ" என மகனிடம் கூறினாள் பெற்க்கொடி.
ஜிம்முக்கு போய்ட்டு அப்ப தான் வந்திருந்தான் அசோக். உடலெல்லாம் வியர்வை ஓடியது.
"வாங்க அங்கிள் மாடிக்கு போகலாம்" என்றான் அசோக்.
"வயலுக்கு போய் விட்டு வாரியா?" என கேட்டார் ஜெயசந்திரன்.
"இல்ல அங்கிள் எனக்கும் விவசாயத்துக்கும் ரெம்ப தூரம். நான் ஜிம்முக்கு போய்ட்டு வாரேன்" என்றான் அசோக்.
குளித்து முடித்து விட்டு சுப்பிரமணியன் வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தார் ஜெயசந்திரன்.
"அண்ணாச்சி பூரி ரெடியா இருக்கு சாப்புடுக்க" என்றாள் பொற்க்கொடி.
"சுப்பிரமணி வரட்டும் சேர்ந்து சாப்புட்டுக்கிடுறேன்" என்றார் ஜெயசந்திரன்.
"அப்ப காபியாவது குடிங்க" என்ற பொற்க்கொடி காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
காபியை குடித்தவர் "நான் எதிர்த்தாப்புல இருக்க தொழுவை பார்த்திக்கிட்டிருக்கேன்" என கூறி விட்டு எதிரே இருந்த சுப்பிரமணியன் தொழுவிற்க்கு சென்றார் ஜெயசந்திரன்.
மாட்டு தொழு நவின மாற்றத்தில் இருந்தது. இருபது மாடுகள் வரை இருந்த தொழுவில் இரண்டு ஜெர்சி மாடுகள் மட்டும் நின்று கொண்டிருந்தது.
அவர்கள் வாழ்ந்த ஒட்டு வீடு கான்கிரிட் வீடாக மாறி இருந்தது. ஒரு டிரக்டர் நின்று கொண்டிருந்தது.
இப்பொழுது ஜெயசந்திரனின் பார்வையில் ஒன்று பட்டது.
"இது அது போல தெரிகிறதே" என யோசித்தவர், ''சரி பார்த்து விடுவோமே" என குனிந்து அடியில் சென்றார்.
தூர்ந்து போயிருந்தவற்றை தன் கைகளால் சுத்தம் செய்தார்.
ஜெயசந்திரன் என்ற பெயர் தெளிவாக தெரிந்தது.
ஜெயசந்திரனின் வாழ்வில் மறக்க முடியாத அதே மாட்டு வண்டி.
ஒங்கி அடித்தால் உதிர்ந்து விடும் அளவு பலகீணப்பட்டிருந்தது.
ஜெயசந்திரனின் கொள்கை, கோட்பாடு, வாழ்வியல் என எல்லாவற்றையும் இந்த மாட்டு வண்டி உடைத்தெறியும் புள்ளியாக அமைந்தது.
தனது வாழ்நாளில் முதன் முறையாக பின்னோக்கி பயணித்தான்.
பழைய நினைவுகள் அவனை சுற்றி வளைத்தது.
அந்த மாட்டு வண்டிக்கும் ஜெயசந்திரனுக்கும் நிறைய தொடர்பு இருந்தன.
சிறு வயதில் ஜெயசந்திரனும் சுப்பிரமணியனும் அந்த வண்டியின் மோக்காவில் சீசா விளையாடிக்கொண்டிருக்கும் போது முக்கு வீட்டு மாரியப்பன் சுப்பிரமணியன் பக்கத்துல ஏறிட்டான், உடனே மோக்கா ஜெயசந்திரன் பக்கம் தூக்கிச்சி.
மோக்காவிலிருந்து கீழே விழுந்து, இடது கை ஒடிச்சி நகரத்தில போய் கெட்டு போட்டாங்க.
தொழுவின் அருகில் இருந்த தெரு விளக்கின் வெளிச்சம் மாட்டு வண்டியில் விழும், இரவு அந்த வண்டியில் அமர்ந்து தான் பாடம் பாடித்தார். புளியங்குடி வந்து ஐந்து வருஷம் வரை அந்த வீட்டுல லைட் கிடையாது
வெயில் காலத்தில வீட்டு திண்னையில ஜெயசந்திரனின் அம்மா படுத்திருப்பா, ஜெயசந்திரன் மாட்டு வண்டியில படுத்திருப்பார். மாட்டு வண்டியில இருப்பு சாக்குன்னு ஒன்னு உண்டு, அதாவது சாத்துக்குள்ள வைக்கல அடைச்சி வச்சிருப்பாங்க, அதில் அமர்ந்தால் அழுத்தது.
அந்த இருப்பு சாக்கு மேல தான் படுத்திருப்பார். அந்த சுகமான தூக்கம் இன்றைய A/Cஅறையில் அவருக்கு கிடைக்கவில்லை.
ஒரு முறை ஊர் கிணற்றுல தண்ணி எடுக்கறப்போ ஜெயசந்திரன் அம்மா கால் தடுமாறி உள்ளே விழுந்துட்டாப்புல.
அங்க நின்ன அம்பளைக உள்ள விழுந்து தூக்கிட்டாங்க, நல்லா தண்ணிய குடிச்சிட்டார் அவரது அம்மா.
உடனே இந்த வண்டிய சாய்ச்சி போட்டு அதன் சக்கரத்தில அவர் அம்மாவை படுக்க வச்சி துணியால கட்டி வேகமா சுத்துனாங்க. குடிச்ச தண்ணிய பூரம் கக்கி உயிர் பொழச்சார், அம்மாவின் அருகில் அவர் அழுது கொண்டு நின்றது அவரது நினைவில் வந்தது.
அந்த காலத்தில் கிரீஸ் கிடையாது, அதற்க்கு பதில் மசவுன்னு ஒன்னு தயாரிப்பாங்க.
வைக்கல தீயிட்டு கொழுத்துவாங்க அதை எடுத்து சிரட்டையில போட்டு அதில வெளக்கெண்ணாய விட்டு பெசையுவாங்க.
அந்த மசவை வைத்துத்தான் மாட்டு வண்டியில் அச்சின் உராய்வுக்காக போடுவார்கள்.
வண்டியின் பின்னால் நின்று ஒருவர் தூக்குவார், ஒருவர் பைதாவை மெதுவாக கழற்றி அதில் மசவு போடுவார்.
அதை சிறு வயதில் வேடிக்கை பார்ப்பார் ஜெயசந்திரன். அந்த காலத்தில் சுப்பிரமணியன் வீட்டில் வேலை பார்த்த பேச்சியப்பன் தான் மசவு தயார் செய்வார்.
பொதுவாக விடியற்காலையில் தான் தயாரிப்பார். வைக்கோல் எரியும் பொழுது அதன் அருகில் இருக்க கதகதப்பா இருக்கும்.
மசவு போட்ட உடன் விரலில் உள்ள மீதி மசவை வைத்து ஜெயசந்திரனுக்கு மீசை போட்டு விடுவார் பேச்சியப்பன்.
ஒரு முறை ஆணியை வைத்து வண்டியின் சட்டத்தில் ஜெயசந்திரன் என தனது பெயரை எழுதியிருந்தார்.
அதை வைத்து தான் இப்ப அடையாளம் கண்டார்.
வண்டியோடு தொழுவுக்குள் வந்தார் சுப்பிரமணியன்.
"எப்ப வந்த" என கேட்டவாறு வண்டியை விட்டு இறங்கினார்.
"இப்ப தான் வந்தேன்" என்றவர்
"இது நம்ம வீட்டுல இருந்த மாட்டு வண்டி தான. ஏன் இப்படி ஆயிடுச்சி?.என கேட்டார் ஜெயசந்திரன்.
"அதே வண்டி தான். இப்ப வண்டி மாட வச்சி விவசாயம் பண்ண முடியாது. அதனால பயன்படுத்தாம இருந்து இப்படி ஆயிருச்சி" என்றான் சுப்பிரமணியன்.
"சரி இதை எதற்க்கு இங்க வைத்திருக்க டிஸ்போஸ் பண்ண வேண்டியது தானே" என்றார் ஜெயசந்திரன்.
"எதற்க்காக டிஸ்போஸ் பண்ணனும் நமக்காக உழைத்த ஒன்று. இதை வாங்கி யாரும் உபயோகபடுத்த முடியாது.
கேட்டு வருபவன் விறகாக்க தான் கேட்க்கிறான். நமக்காக வாழ்ந்த ஒன்று விறகாகி எரிந்து போக எனக்கு விருப்பமில்லை.
நம்முடம் இருந்த எல்லாமே ஒரு உயிர் தான். அதை ஏன் நாம் பிரியனும், அது ஒரு பக்கம் நின்று விட்டு போகட்டுமே என விட்டு விட்டேன்" என்றார் சுப்பிரமணியன்.
அப்பொழுது அங்கு வந்த பாக்கியம்ம
"ஏய் நீ அண்ணாமலை மகன் தான? அவள் எப்படி இருக்க? உன் கூட தான் இருக்காகாள" என கேட்டாள்.
பாக்கியம்மாவும் ஜெயசந்திரனின் அம்மா அண்ணாமலையும் ஒரு ஊர் காரக,தூரத்து சொந்தமும் கூட, அதனால் தான் உரிமையோடு கேட்டாள்.
ஜெய சந்திரன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
"ஏய் நான் கேட்கேன் நீ பதில் சொல்லாமல் நிக்க" என்றாள் பாக்கியம்ம.
ஜெயசந்திரனின் நாக்கு தழுதழுத்தவாறு ஒர் பொய் சொன்னது
"நல்லா இருக்காங்க, என் கூடா தான் இருக்காங்க" என்று.
உண்மையில் அவர் அம்மா இருப்பது முதியோர் இல்லத்தில்.
நன்றி
எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.Com.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.
Comments
Post a Comment