Skip to main content

அப்பாவின் கைக்கடிகாரம்

அப்பாவின் கைக்கடிகாரம்

"அப்பாவின் கைக்கடிகாரம்" என்ற பெயரில் எனது அடுத்த சிறுகதை.

"ஏய் செல்வக்கா", என வீட்டு வாசலில் சத்தமிட்டு கொண்டிருந்தான் பால் பண்ணையில் வேலை பார்க்கும் மேலத்தெரு அந்தோணி.

மகனுக்கு சோறு வச்சிக்கிட்டிருந்த செல்வமதி வாசலில் தொங்கும் திரையை லைட்டா விலக்கி "என்னய்யா" என வீட்டுக்குள்ள இருந்தவாறே கேட்டாள்.

"மேல மந்தை பிள்ளையார் கோவில் கிட்ட போதையில வாத்தியார் விழுந்து கிடக்காரு" என்று கூறி விட்டு வேகமாக சென்றான் அந்தோணி.

செல்வமதிக்கு இந்த வார்த்தை புதிதல்ல வாரத்தில் ஒரு நாள் ரெகுலராக கேட்க்கதது தான். இருந்தாலும் கொஞ்சம் பதட்டமடைந்தாள் செல்வமதி.

சாப்பிட்டுக்கொன்டு இருந்த ரவி எந்த பதட்டமுமின்றி சாப்பிட்டு முடித்தான்.

----------

வீட்டு வாசலில் நின்ற பைக்கை ஸடார்ட் பண்ணி கொண்டிருந்த ரவி, வீட்டு வாசலில் ஓர் ஆட்டோ வந்து நிற்ப்பதை பார்த்து வண்டியை ஆப் செய்தான்.

ஆட்டோக்குள்ள இருந்து மேல மந்தை தலையாரி மகன் வீரப்பன் இரங்கினார். போதையில் இருந்த முத்துச்சாமி வாத்தியார மெதுவா வெளியே இழுத்தார் வீரப்பன், ஆட்டோவுக்குள்ள மேட்டுத்தெரு குமார் இருந்தார்.

கண்கட்டிய போதையால் வண்டிய விட்டு இறங்க முடியாமல் தடுமாறினார் வாத்தியார். 

ஆட்டோவுக்குள்ள  இருந்த குமார் வாத்தியாரோட கம்பு கூட்ட புடுச்சி தூக்கி வெளியே கொண்டு வந்தார்.

"குமாரண்ணே தேவையில்லாத வேலை உங்களுக்கு. இவன அங்கே கிடக்கட்டும்னு விடுததை விட்டுட்டு தூக்கிட்டு வந்துருக்கிய" என்றான் ரவி. ரவியின் வார்த்தையில் கோபம் தெரிந்தது.

"ஆயிரம் இருந்தாலும் அப்பா, இப்படியெல்லாம் பேசக்கூடாது" என்றார் வீரப்பன்.

"தம்பி என் போன்றவர்கள் இன்னைக்கு மேடை பேச்சாளரா இருக்கம்னா, அதுக்கு உங்கப்பா தான் காரணம்" என்றார் குமார்.

"விடுங்கண்ன இவனால ஒரு வாய் சோறு நிம்மதியா சாப்பிட முடியல" என்று விரக்தியுடன் பேசிய ரவி,

"எவ்வளவுன்னே" என ஆட்டோ டிரைவரிடம் கேட்டான்.

"குமார் சார் ஏற்க்கனவே கொடுத்துட்டார்" என்றார் டிரைவர்.

"தம்பி நான் குடுத்துட்டேன் விடு" என்றார் குமார்.

வாத்தியார வீட்டுக்குள்ள படுக்க வச்சிட்டு வீரப்பனும், குமாரும் வந்தார்கள். கூட செல்வமதியும் வந்தார்.

"அம்மா சார பார்த்துக்கொங்க" என செல்வமதியிடம் கூறிய குமார், தம்பி நாங்க வாரோம் என கூறி விட்டு ஆட்டோவில் கிளம்பினார்கள்.

-------------

ரவிக்கு அப்பாவின் மீது விரக்தி ஏற்பபட்டு இருபது வருஷம் ஆயிருச்சி.

அப்போ இரண்டாப்பு படிச்சிக்கிட்டிருந்தான் அப்போவோட சித்தி மகள் தங்கபுஷ்ப அத்தை வேலப்ப நாடானூர்ல வீடு கட்டியிருந்தா, பால் காய்ச்சுததுக்கு ரவியையும் கூட்டிட்டு போயிருந்தார் அவரது அப்பா முத்துச்சாமி வாத்தியார்.

புது வீட்டுக்கு பக்கத்துல  இருந்த புளியமரத்துக்கு கீழே விளையாடிக்கொண்டிருந்த ரவியை அழைத்தான் ஜெயா அத்தை மகன் சீனிவாசன்.

"டேய் ரவி உங்கப்பா குடிச்சிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்காருடா" என்றான் சீனிவாசன்.

ரவி ஓடி சென்று பார்த்தான், அங்க கடும் போதையில் தங்கராசு பெரியப்பா கிட்ட சண்டை போட்டுகிட்டிருந்தார்.

போதையில் தள்ளாடுவதும், பல்லை கடிப்பதும், அசிங்கமாக பேசுவதுமாக இருந்தார், கூடியிருந்தவர்கள் அவரை கேலி செய்து கொண்டிருந்தனர். ரவிக்கு அழுகையே வந்து விட்டது.

அப்பா சும்மாயிருங்கப்பா என அழுது கொண்டே கூறினான். சிறிது நேரத்தில் அவன் அப்பா அப்படியே படுத்து விட்டார்.

இரவு எட்டு மணியாயிருச்சி, பால் காய்ச்சிததுக்கு வந்த எல்லோரும் போயிட்டாங்க, ரவியும் அவன் அப்பா மட்டும் இருந்தார்கள். அப்பாவுக்கு இன்னும் போதை தெளியல.

"ரவி பஸ் ஏத்தி விட்டுட்டா அப்பாவை பத்திரமா கூட்டிட்டு போயிருவியா" என கேட்டார் தங்கவேல் மாமா.

"போயிடுவேன் மாமா" என்றான் ரவி.

புளியங்குடிக்கு வரும் கடைசி வண்டியில ஏற்றி விட்டார் மாமா. பஸ்ஸில கூட்டமேயில்லை. அப்பா ஒரு சீட்டுல படுத்துட்டார். 

பஸ் புளியங்குடி வந்த பொழுது வெறும் இரண்டு பேர் தான் பஸ்ஸில் இருந்தார்கள். கண்டக்டர் மெதுவாக இறக்கி விட்டவர்  "தம்பி பார்த்து கூப்பிட்டிட்டு போ" என கூறி விட்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.

இரண்டு எட்டு எடுத்து வைத்தவர் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பஸ் ஸ்டாண்டில் இருந்த திண்டில் படுத்து விட்டார். அந்த நேரம் பார்த்து மழை வேற வந்திருச்சி கரண்டும் போயிருச்சி.

ரவி பயத்தோடு அப்பாவின் அருகிலே இருந்தான். தெரிந்த ஆள் யாரும் வருகிறார்களா என பார்த்தான்.
பனிரெண்டு மணிக்கு அப்பாவுடன் வேலை பார்க்கும் செவ்வந்தி டீச்சரும் அவர் வீட்டுக்காரரும் பஸ்ஸில் இருந்து இறங்கினார்கள்.

ரவி இருப்பதை பார்த்த டீச்சர் " என்னடா ரவி இங்கயிருக்க" என கேட்டார்.

ரவி அழுதபடி அப்பாவை காட்டி நடந்ததை கூறினான். 

"அழாதடா அத்தை பார்த்துக்கிறேன்" என்றார்.

அங்க நின்ன குதிரை வண்டிய கூப்பிட்டு அதில் இருவரையும் வீட்டுக்கு ஏற்றி விட்டார் செவ்வந்தி டீச்சர் வீட்டுக்காரர்.

இது தான் முதல் வெறுப்பு உருவாக காரணம்.

பின்பு அப்பாவின் குடிப்பழக்கம் கூடியது, வாங்கிய சம்பளமெல்லாம் குடிக்கு போனது. வீட்டிலிருந்த அத்தனை தங்க பொருளும் போயிருச்சி.அம்மாவின் கண்ணீரை அடிக்கடி பார்க்க ஆரம்பித்தான்.

-----------

ரவி வளர, வளர வெறுப்பும் வளர்ந்து கொண்டே வந்தது. ஒரு வழியா பணிரெண்டாம் வகுப்பு முடித்தான்.

"இவரால என்ன வெளியூர்ல படிக்க வைக்க முடியாதும்மா" என கூறியவன் உள்ளூர்ல ஒர் சாதாரண காலேஜில் சேர்ந்தான்.

அப்பாவின் மீது ஏற்ப்பட்ட கோபம் அவரை எதிரியாக பார்க்க வைத்தது. இனி இவரிடம் பத்து பைசா கேட்க கூடாது என முடிவெடுத்திருந்தான்.

மாலை நேரத்தில் ஒர் மிட்டாய் கம்பெனிக்கு வேலைக்கு போனான். இந்த குடிகாரன் முன்னால பெரிய அளவில் முன்னேறனும் என உறுதியோடு இருந்தான்.

மூனாவது வருஷம் படிக்கும் பொழது வீட்டுலே ஒர் மிட்டாய் கம்பெனிய ஆரம்பிச்சான், நாளும் பொழுதும் அவனுக்கில்லாமல் போனது. நாள் முழுதும் வேலை பார்த்தான். 

இரண்டே வருஷத்துல பெரிய கம்பேனியும் ஒரு பேக்கரியும் ஆரம்பிச்சான். உள்ளூர் ரியல் எஸ்டேட் புரோக்கர் முதல் பக்கத்து ஊர் புரோக்கர் வரை ரவியை சுத்த ஆரம்பித்தனர். அந்தளவு பணம் அவன் கையில்.

வாத்தியார் ரிட்டையர்ட் ஆகிவிட்டார். பழையது போல் குடிப்பதில்லை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடித்தார், அவர் உடல் மிக தளர ஆரம்பித்தது. இவ்வளவு நாளா குடித்தது அவர் உடலின் எல்லா பாகத்தையும் பழுதாக்கியிருந்தது. 

ஆனாலும் ரவிக்கு அவன் அப்பா மீதான வெறுப்பில் மாற்றமேயில்லை.

எல்லா டாக்டர்களும் கை விட்டுவிட உடல் தளர்ந்த வாத்தியார் ஒரு வார படுக்கையில் உயிர் பிரிந்தார்.

-------------

வாத்தியார் இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சி, ரவிக்கு சுரண்டையில ஒரு பொண்ண பேசி முடிச்சிருந்தாங்க. மறு நாள் கல்யாணம். சுரண்டைக்கு கிளம்ப தயாராய் கொண்டிருந்தான் ரவி.

ரவி ஒத்த பிள்ளை என்பதால் எல்லாவற்றையும் அவனே எடுத்து வைத்தவன், ஏதோ ஒர் பொருள் குறைவது போல் உணர்ந்தான்.

"அம்மா எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன், ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல் உணர்கிறேன், அது எதுன்னு தெரிய மாட்டேங்குது" என்றான்.

"டேய் ரவி உண்மையிலே நானும் உணர்கிறேன், அது பொருள் அல்லடா, உயிர். உன் அப்பாதாண்டா அது". என்றாள் செல்வமதி.

"அவர போய் இப்ப ஏன்மா நினைக்கிற" என்றான் ரவி.

"இப்ப நினைக்காம எப்பன்டா நினைக்கது. என் நெற்றியில் எவ்வளவு பெரிய பொடடு வச்சிருப்பேன், இன்னைக்கு இல்லையா," என்றவர்   

"பொன்ன வேனும்னா நீ வாங்கி தரலாம், பூவும் பொட்டும் அவர் தான்டா தர முடியும்" என கூறிய பொழுது அவள் கண்ணில் கண்ணீர்  வந்து விட்டது.

அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கனத்த மனதுடன் அவன் அறைக்கு சென்றான்.

முதன் முதலாய் அப்பாவை நினைத்தான்.

அவனுக்கு சட்ரெண்று ஒரு ஞாபகம் வந்தது, இறக்கும் தருவாயில் ஒரு கை பையை ரவியிடம் தந்து, "இறந்த பின்பு இதை பார்" என கூறியிருந்தார். 

அவர் மீதான வெறுப்பில் அதை அவன் திறந்தே பார்க்கவில்லை.

-----------

பீரோவிலிருந்த பையை தேடிப்பிடித்து எடுத்தான். அதில் ஒரு வாட்சும், ஒரு கடிதமும் இருந்தது. வாட்ச் அவருக்குறியது.

கடிதத்தை பிரித்தான்.

"அன்புள்ள மகனுக்கு பிழையான தகப்பன் எழுதுவது" என துவங்கியது 

"இந்த கடிதத்தின் நோக்கம் என்னை நியாயப்படுத்துவதற்கல்ல, தெரியாத சிலவற்றை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக

இதிலுல்ல விஷயம் உன் அம்மாவுக்கும் தெரியும். உன்னிடம் இதை சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கியிருக்கேன்.
இன்று நானே அதை தெரிவிக்கிறேன்"
என குறிப்பிட்டிருந்தவர்

"எனக்கு திருமணம் ஆகும் பொழுது நான் நிரந்தர ஆசிரியர் வேலையில் இல்லை, ஒரு ஜவுளிக்கடை வேலையாள் சம்பளத்தை விட கம்மியான சம்பளத்தில் ஆசிரியராக இருந்தேன்.

திருமணமான ஒரு வருடத்தில் நீ பிறந்தாய். உனக்கு ஒரு வயது இருக்கும் பொழுது, மூச்சு விட சிறமப்பட்டாய். பயந்து போய் மருத்துவரிடம் கொண்டு சென்றேன்.

உன் இதயத்தில் பிரச்சனை இருக்கு என்ற டாக்டர், ஐந்து வயது வரை இந்த பிரச்சனையிருக்கும்.அது வரை கவனமாக பார்க்க வேண்டும் என்றார்கள்.

வாரம் ஒர் ஊசி போடணும்னு சொன்னார், 

சரியென அந்த ஊசியை வாங்க போனேன். அந்த ஒரு ஊசியின் விலை இருனூரு ரூபாய்.

அன்று என் மாத சம்பளமே ஆயிரம் தான்.

ஒரு மாசம் தெரிஞ்சவங்கிட்ட வாங்கி போட்டுட்டேன்.

அந்த நேரம் உன் தாயுக்கு அடிக்கடி தலையில் வலி ஏற்ப்பட்டது..

டாக்டரிடம் காண்பித்த பொழுது மூளைக்கு போகும் ரத்தம் சரியா போகலை என்றார்.

அவளுக்கு வேற மருத்துவம்,

என்னால முடியல, அப்பம் என் நண்பன் ஒருவன் சங்கரன்கோவில் கமிஷன் கடையில லோடு மேன் வேலையிருக்குன்னு சொன்னான்.

அந்த வேலையில் சேர்ந்தேன். வேலை சாயங்காலம் ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணி வரை.

ஒரு நிமிடம் கூட நிற்க்க முடியாது. மிளகாய் வத்தல் எடை போட்டு பண்டலாக்கி லாரியில ஏத்தனும். கையெல்லாம் பொத்து போயிருச்சி. இருந்தாலும் தினம் நூறு ரூபாய் கிடைப்பதால் ஏற்றுக்கொண்டு வேலை பார்த்தேன்.

இரவு வீட்டுல வந்து படுக்கும் பொழுது, என் உடலெல்லாம் வலிக்கும், மிளகாய் நொடியில் இருமல் வரும், எனக்கு தூக்கம் வராது.

உன் தாய் தலைவலியால் தூங்க முடியாமல் புலம்பிக்கொண்டிருப்பாள்.

நானும் தூங்க முடியாமல் தவித்து கொண்டிருப்பேன்.

இதற்க்கிடையில் காலையில் மாட்டுக்கு புல்அறுத்துட்டு வரனும், அதுக்கு ஆறு மணிக்கு எழும்பனும். பயங்கர துன்பத்தில் இருந்தேன்.

என் நிலையறிந்த லோடு மேன் ஒருவர், கொஞ்சம் சரக்கடியுங்க நல்லா தூக்கம் வரும் என்றார்.

என் வாழ்வில் நான் செய்த மிகப் பெரிய தவறு, அந்த ஆலோசனையை கேட்டது தான். குடிக்க ஆரம்பித்தேன், அவர் கூறியது போல் நல்ல தூக்கம் வந்தது.

ஆனால் என் வாழ்வே அசிங்கமாகிவிட்டது பெத்த புள்ளை வெறுக்கும் தகப்பன் ஆகிவிட்டேன்.

உனக்கும், உன் அம்மாவுக்கும் நான் கொடுத்த வலி கொடியது.

நான் கூறியது உன் மனதை குழப்பலாம், தயவு செய்து என்னை மன்னித்து விடாதே.

என் மீதான வெறுப்பு தான் உன் வளர்ச்சியின் அடித்தளம், எனக்கு முன்னால் வாழ வேண்டும் என்பதால் தான் போராடி வளர்ந்தாய். இன்னும் அதே நிசைப்பில் வாழ், திசை மாறாதே.

இந்த கடிகாரம் உன் தாய் எனக்கு ஆசையாய் வாங்கி கொடுத்தது.

குடிகார கணவன் என்ற நிலை வந்ததால் அந்த கடிகாரத்தை கட்டுவதில்லை.

இந்த கடிகாரத்தில் என் உயிர் இருப்பதாவே நினைத்துக்கொள், இதை பார்க்கும் பொழுது என் மீதான வெறுப்பு வர வேண்டும் என்பதால் உன்னிடம் தருகிறேன்.

நன்றி.

இவன்.
பிழையான தகப்பன்
முத்துச்சாமி"

என்றிருந்தது.

----------

"டேய் ராஜேஷ் உன் வாட்ஷப்புக்கு எங்க அப்பா போட்டா அனுப்பியிருக்கேன் அதில நாலு பிரின்ட் போட்டு போட்டாவா பிரேம்பன்னிடு.

ஒன்ன கடையில மாட்டிட்டு மூன வீட்டுக்கு கொண்டுட்டு வா" என்றவன்.

"வரும் பொழுது அதுக்கு ஒர் மாலையும் வாங்கிட்டு வா" என்றான் ரவி.

மகன் பேச்சை கேட்டு குழம்பியவாரு அவனை பார்த்தாள் செல்வமதி

மகனின் கையில் கனவரின் வாட்ச் இருந்தது.

அவள் மனம் நிறைந்து வழிந்தது.

எழுதியது.
R.V.நல்ல பெருமாள்.B.C.om.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments