மூணு கால் நாய்
"மூணு கால் நாய்,
என்ற பெயரில் என் சிறு கதை.
ஒத்த நாள் கூட பிரிந்திருந்ததில்லை. உலகத்தை விட்டுப் போய் இன்னோட மூணு நாளாச்சு. மனதளவில் கொலஞ்சி போயிருந்தார் உலகநாதன்.
பதினைந்து நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கும்போதே கிறுகிறுன்னு வருதுன்னு சொல்லி கீழே விழுந்தா.
தென்காசி திருநெல்வேலி மதுரைன்னு ஆம்புலன்ஸில் சுத்தி கடைசில
பொணமாத்தான் இலஞ்சிக்கு வந்தாள் கோமதி.
நோய்க்கு புரியாத பேர வச்சிருக்கான், நோய கண்டுபுடிக்க மெஷின் வச்சிருக்கான், ஆனால் நோய குணமாக்குற மருந்து மட்டும் இல்லைங்கிறான்.
உலகநாதன் பதினைந்து நாள் போராடி பார்த்தார், கடைசியில ஒன்னும் நடக்கல
இறந்து போகக் கூடிய வயதும் இல்லை. ஆடி மாசம் வந்தா ஐம்பத்தைந்து வயசு ஆகுது. சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னு பிறந்தாள். அதனாலே கோமதின்னு பெயர் வச்சாங்க.
மூச்சி விடுததுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட புருஷன நினைச்சி தான் புலம்பினா.
"உங்க அப்பாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துட்டேன், அவர நெனைச்சா பாவமா இருக்குடா, அவர சோத்துக்கு கையேந்த வச்சிராதிங்கடா" என கை எடுத்து கும்பிட்டு கேட்டாள்.
____
உலகநாதன் வேளாண் துறையில் அதிகாரியாக இருக்கிறார். ரிட்டயர்டு ஆக இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு, இப்போ இணை இயக்குனராக ப்ரமோஷன் வேற வந்து இருக்கு.
கண்டிப்பா சென்னையில் தான் வேலை பார்க்கணும்.
செங்கோட்டை, தென்காசி, கடையம்ன்னு இலஞ்சி பக்கத்திலே வேலை பார்த்திட்டு இருந்தவர், சென்னைக்கு மாறுதல் என்பதால் வாலண்டரி ரிட்டையர்ட் ஆகி விடலாம் என முடிவில் இருந்தார். இப்ப மனைவி வேற இறந்து விட்டார். வேலையை விட்டே ஆகவேண்டிய கட்டாயம்.
அவர் வேலை மீது அவருக்கு நிறைய பக்தி இருந்தது. இந்த வேலையை வைத்துத்தான் சாதாரண இட்லிக்கடை முத்துப்பிள்ளை கூட்டு வண்டி இசக்கியா பிள்ளை வீட்டு படியேறி
"உங்க மகள என் பையனுக்கு கொடுப்பிகளா" என கேட்க்க முடிஞ்சது.
வேலையில் நூறு சதவிகிதம் நேர்மையாய் இருந்தவர், ஒரு குண்டு ஊசி கூட ஆபீஸிலிருந்து தவறியும் வந்து விடக்கூடாது என வாழ்ந்தவர்.
மனைவி குழந்தைகள் தான் அவர் உலகம்.
உலகநாதனுக்கு சிறு வயதிலே தாய் கிடையாது, திருமணத்திற்க்கு பின்பு தாய் உறவு அறிந்தார்.
மனைவி கோமதி மூலமாக.
காலையில வேலைக்கு கிளம்பும் பொழுது அவர் பேனாவுக்கு மையடைத்து செருப்பை துடைத்து வைத்து, பஸ் டிக்கெட்டுக்காக சரியா சில்லைறையை மாற்றி வைத்து, சில நேரம் தலை கூட சீவி அனுப்பி வைப்பாள். பார்த்து பார்த்து பணிவிடை செய்தாள்.
திருமணமான புதிதில் பாலசந்தர் படம், k.S.கோபாலகிருஷ்ணன் படம்னா கூட்டிட்டு போவார்.அன்னைக்கு கோமதியின் மனம் துள்ளும்.
உலக நாதனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தது பொண்ணு பெயர் சங்கரி இலஞ்சி பிள்ளைமார் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா, புளியங்குடியில கட்டி கொடுத்திருக்கார். மாப்பிள்ளை தென்காசியில ஹார்ட்வேர்ஸ் கடை வச்சிருக்கார், தென்காசியில தான் வீடு.
தினமும் இலஞ்சிக்கு வந்துட்டு போவாதால வீட்டுக்கும் அடிக்கடி வருவாள்.
பையன் பெயர் சிதம்பரம், டெல்லியில புள்ளியியல் துறையில அதிகாரியா இருக்கான் மச்சினன் சண்முகத்தின் மகளை கட்டியிருக்கிறார்.
உலகநாதன் சைவ பிள்ளைங்கிறதால சாப்பாடு விஷயத்தில ரெம்ப கவனமா இருப்பார் வெளியில சாப்பிடவே மாட்டார்.
யாராவது சாப்பிட கட்டாய படுத்தினால் "சைவ கடைன்னு பேர வச்சுக்கிட்டு ஆம்பளைட்ட போட்ட கல்லுல தோசையும் போடுவான்" என கூறி தவிர்த்து விடுவார்.
கடைசி நேரத்தில் கோமதியின் அடி மனதின் தவிப்பு இதுதான்.
நம் கண்ணுக்கு பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்வார், பிள்ளைங்க கவனிச்சிக்கிடுவாங்களா என்ற ஏக்கம் இருந்தது.
அதனால் தான் "அவரை கையேந்த விட்டுறாதிங்கடா" என கூறியிருந்தார்.
உலகநாதன் மகனுடன் டெல்லியில் சென்று விடலாம் என திட்டமிட்டிருந்தார்.
---------
"சிதம்பரம் ரெம்ப குளிருதுடா இந்த பேன ஆப் பண்ணுடா" என்றார் உலகநாதன்.
"இந்த குளிருக்கே இப்படி சொல்லுதிகளே டெல்லியில் குளிர் மைனஸ் வரை போகும். நீங்க எப்படி தான் சமாளிக்க போறீகளோ தெரியலை" என்றான் மகன் சிதம்பரம்.
மகனுக்கு தன்னை டெல்விக்கு அழைத்து செல்ல விரும்பமில்லை என்பதை அவன் பேச்சை வைத்து புரிந்து கொண்டார்.
அவர் மனதில் பயங்கர வேதனை மகன் இப்படி சொல்லி விட்டானே என்று.
மன வேதனையில் கண்ணை மூடியவாறு மனைவியை நினைத்து அழுதார். அப்பொழுது அடுப்படியில் மகனிடம் மகள் பேசுவது கேட்டது.
"அப்பாவிடம் நீ பேசியதை கேட்டேன், அப்பாவை என் கிட்ட தள்ளி விட்டு போய் விடலாம் என்ற நெனைப்பு உன் மனசுல இருக்குன்னு தெரியுது.
அப்படி நெனப்பு இருந்தா அழிச்சிடு" என்றாள் மகள் சங்கரி.
"அது இல்லக்கா அங்க பொலுசன் பிரச்சனை வேற இருக்கு, அப்பாவை நீயே பார்" என்றான் சிதம்பரம்.
"டேய் மச்சான பக்தி உனக்கு நல்லாவே தெரியும், அவர் அவங்க வீட்டுக்கு தெரியாம கறி முட்டன்னு சாப்பிட்டு பழகினவர். அதனாலே புளியங்குடியில இருந்து தென்காசியல தனியா இருந்தவர்.
என் வீட்டுல கறி முட்டைன்னு உண்டு. அப்பா என்னிடம் வேண்டாம்" என்றாள் சங்கரி.
இவர்களின் வார்த்தைகளாள் மூடிக்கொண்டிருந்த கண்ணையும் மீறி கண்ணீர் வெளிவந்தது உலகநாதனுக்கு. யாரும் பார்க்காதவாறு போர்வைக்குள் மூடியவாறு அழுதார்.
பிள்ளைகளின் வார்த்தைகளால் வாலண்டரி ரிட்டையர்ட்மென்ட் திட்டத்தை கைவிட முடிவு செய்தார்.
------------
தலைமை செயலகத்தில் தான் அலுவலகம் இருந்தது. நல்லா இருந்தா பதிைனைத்துக்கு பத்து அளவுள்ள அலுவலகம். இது வரை ஐம்பது பேர் வரை வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தவர்.
இப்பொழுது இரண்டு கிளர்க் ஒரு பியூன் என மூன்று பேருக்கு அதிகாரி, ஆனால் இணை இயக்குனர் என்ற புரமோசன்.
உலகநாதனின் வாழ்க்கை குழப்பத்தில் இது பெரிதாக தெரியவில்லை. சேப்பாக்கம் அருகில் ஒர் அறையில் தங்கியிருந்தார். மெஸ்ஸில் சாப்பாடு என வாழ்ந்தார்.
வேலைக்கு சேரும் பொழுது ஒவ்வாறு நாளும் வியாழ கிழமை அரை நாளும், வெள்ளி கிழமை முழு நாளும் லீவ் எடுத்து தென்காசி வர வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். அவர் இது வரை லீவுகள் அதிகம் எடுக்காததால் போதிய லீவு இருந்தது.
___
அவர் பணியில் சேர்ந்த முதல் வியாளக்கிழமை.
மதியம் ஒண்ணரை மணிக்கு மதுரை கிளம்பும் ரயிலில் ஏறி அமர்ந்தார். மதியம் சாப்பிட ஒர் தயிர் சாதம் வைத்திருந்தார்.
அவருக்கு சாப்பிட மனமில்லை, தயிர் சாதம் சாப்பிடாமல் இருந்தது.
சுமார் நான்கு மணியிருக்கும் ரயில் எதிரே வரும் ரயில் கிராசிங்கிற்க்காக விந்ததாச்சலம் ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.
தினமும் இதே இடத்தில் கிராசிங்கிற்க்காக ஐந்து நிமிடமாவது நிற்க்குமாம். டீ விற்க்கும் ஒர் பையன் சொண்ணான்.
இரயில் நின்று கொண்டிருந்த இடத்தில் சில நாய்கள் நின்று கொண்டிருந்தன.
மீதமுள்ள உணவுகளை சிலர் அதற்க்கு போட்டார்கள். சிலர் பிஸ்கட் ஸ்னாக்ஸ்களை போட்டார்கள்.
அப்பொழுது அந்த நாய்களுக்கிடையே மூன்று காலுடன் ஒர் நாய் இருந்தது.
மூன்று காலுடன் மாற்ற நாய்களுடன் போட்டியிட்டு உணவை பெற போராடிக்கொண்டிருந்தது.
இதை பார்த்த உடன் தான் வாங்கி வந்த தயிர் சாதத்தை எடுத்து வந்து, இரயிலை விட்டு இறங்கி அந்த மூன்று கால் நாயை தனியாக அழைத்து தயிர் சாதத்தை பிரித்து வைத்தார். அருகில் கிடந்த ஒர் குச்சியை எடுத்து மற்ற நாய்கள் இதன் அருகாமையில் வராமல் பார்த்தவாறு நின்றார். மன மகிழ்ச்சியுடன் வண்டியில் ஏறினார்.
"சார் நீங்க சோறு வச்ச நாயின் ஒரு கால்ல முத்துநகர் ஏறிடுச்சி. அது தான் மூனு கால்ல சுத்துது" என்றான் வேற் கடலை விற்க்கும் பெரியவர்.
அடுத்த வாரத்திலிருந்து நாய்க்கும் சேர்த்து பார்சல் வாங்க ஆரம்பித்தார்.
அதே போல் வண்டி நிற்க்கும், நாய் எங்கிருந்தாலும் இவரை தேடி வந்து விடும், இறங்கி உணவை வைத்து, நாய் சாப்பிடுவதை பார்த்து மகிழ்வார்.
--------------
கிட்ட தட்ட ஐந்து மாதமாகி ரிட்டையர்ட் நாளும் வந்தது.
மிக குழப்பத்திற்க்கு ஆளானார், மீதாமுள்ள நாள் எப்படி போக போகுது.
மனைவி பயந்தது உண்மையாகிவிடும் போல தோன்றுகிறதே என பயப்பட துவங்கினார். வளர்த்த பிள்ளைகள் சொல்லிக்கொடுத்த பாடம் இவ் உலக வாழ்வு போதும் என எண்ண தோன்றியது.
கோமதி இறைவனிடம் என்னையும் உன்னுடன் அழைத்துக்கொள்ள சொல் என வேண்டினார்.
அவர் மிக சோர்ந்திருந்தார்.
-----------
முப்பது வருடம் வேலை பார்த்த இடத்தில் ரிட்டையர்ட் ஆகியிருந்தால், பெரிய விழாவே நடந்திருக்கும்.
இருக்கதே மூனு பேர், சம்பிரதாய வாழ்த்துக்களுடன் அவர் ரிட்டையர்ட்மென்ட் நாள் முடிந்தது.
ரிட்டையர்ட்மெண்ட்டுக்கு மாறு நாள் வழக்கமான ரயிலில் கிளம்பினார்,
இந்த முறை வழியனுப்ப பியூன் எழுமலை வந்திருந்தான்.
"ஏழுமலை ஒரு தயிர் சாதமும், நான் வெஜ்ஜில ஏதாவது இரண்டு பார்சல் வாங்கி வா" என்றார் உலகநாதன்.
எழுமலைக்கு ஒரே குழப்பம்.
இவர் சுத்த சைவம் பிறகு யாருக்கு நான் வெஜ் கேட்கிறார் புரியவில்லையே என குழம்பியவாறு வாங்கி வந்து தந்தவன்.
"யாராவது வேண்டியவங்க வாராங்களா சார்" என கேட்டான்.
"ம்" என்று பதில் சொன்னார்.
உலகநாதன் மனதில் இரண்டு விஷயங்கள் ஓடியது, ஒன்று எதிர் கால வாழ்வு. அன்பற்ற உலகத்தில் அன்பாக இருந்தவளையும் பறி கொடுத்த பின்பு வாழ என்ன இருக்கு என நினைத்து நொந்து போய்க்கொண்டிருந்தார்.
மற்றொன்று அந்த நாய்.
கடந்த ஐந்து மாதமாக அந்த நாயுடன் அவருக்கு ஏற்ப்பட்ட உறவு.
ரெயில் ஏறும் பொழுது குழப்பத்துடனும் கவலையுடனும் ஏறுபவர் அந்த நாயை கண்ட உடன் அத்தனை கவலையையும் மறந்து உணவிட்டு, அதனை தடவிக்கொடுத்து விட்டு வருவார். அந்த நாயும் அவரை கண்ட உடன் துள்ளி குதிக்கும் சிறிது நேரம் விளையாடிய பின்பு தான் உண்ணும்.
இந்த நாயுடன் ஏற்ப்பட்ட உறவும் இன்றுடன் முடிய போகிறது.
நம்மிடம் அன்பாய் பழககும் உறவுகள் விரைவிலே பிரிந்து விடுகிறதே என்று எண்ணினார்.
இது வரை எல்லா நாளும் கிராஸிங்கிற்க்காக நின்ற ரயில் இன்றும் நிற்க்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்தபடி வந்தார்.
அவர் பிரார்த்தனை பலித்தது. ரெயில் நின்றது.
நாய்க்கான உணவை எடுத்துக்கொண்டு இறங்கியவர், நாயை அழைத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி சென்றார்.
அங்கே இருந்த திண்டில் உணவை பிரித்து வைத்தார்.
அப்பொழுது அவர் உடவில் திடீர் படபடப்பு ஏற்ப்பட்டது, நெஞ்சு வலிக்க துவங்கியது. உடல் வியர்த்தது அப்படி தரையில் சரிந்தார். ரயில் புறப்பட்டது.
ரெயில் அங்கிருந்து சென்று விட்டது, மற்ற நாய்களும் சென்று விட்டன.
உலகநாதன் உடலை சுற்றி குறைத்து களைத்துப்போன மூனு கால் நாய் அருகிலே அமர்ந்திருந்தது.
பிரித்து வைத்த பார்சல் திண்ணப்படாமல் அப்படியே இருந்தது.
எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.Com.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.
Comments
Post a Comment