Skip to main content

சாலை கிணறுகள்

காணாமல் போன சாலை கிணறுகள்


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊருக்குள் நுழையும் போது நம்மை வரவேற்ப்பது பெரிய ஆலமரமும் அதன் அருகே  அமைந்திருக்கும் ஒரு கிணறும் தான்,

தாகம் தீர்க்க வந்த ஏதோ ஒரு காகம் போட்ட எச்சத்தால் அந்த ஆலமரம் வந்திருக்கும்.

ஆனால் இன்று நம்மை வரவேற்பது, ஏதோ ஒரு செல்போன் டவறும், புரோட்டா கடைகளும் தான்.

குமரிப் பெண்கள் முதல் கூன் விழுந்த பாட்டிகள்  வரை கிணற்றைச் சுற்றி நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். 

நீர் இறைக்கும் பொழது வாளியில் இருந்து சிதறும் தண்ணீர் கினற்றில் விழும் பொழுது வரும் சத்தம் ஒரு இசையை கொடுக்கும்.

கூட்டு ரோட்டில் இறங்கி மூனு மயில் தூறம் நடந்து வந்த களைப்புல அப்படி ஆலமரத்தடியில் ஒதுங்கச் சொல்லும்.

மரத்தடியில் போய் நின்ன உடனே, "என்ன மாமா ஊருக்கு போய்ட்டு வாரிரா வாரும் இந்த தண்ணிய குடியும்" என்று கூறுவாள் ஒரு அக்கா மகள்.

அந்த தண்ணிய குடிச்சா தேனா இனிக்கும்.

வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்த இந்தச் சாலை கிணறுகள், இன்று பாழுங்கிணறாய் மாறிவிட்டது. நீர் கொடுத்த அந்த கிணறு இன்று ஊராரின் கவனிப்பாரற்று குப்பை கிடங்காக மாறிவிட்டது.

சாதி பார்த்து நீர் கொடுத்த பாவம் இன்று பழுங்கினறாய் போனது, சமத்துவமாய் நிழல் கொடுத்த ஆலமரமோ விழுதோடு வீற்றிருக்கின்றது. 

ஊருக்கு வெளியே சாலை கிணறு என்றால். ஊருக்கு உள்ளே ஊர் கிணறு என்ற ஒன்று இருந்தது.

சாலை கிணறுகளில்  நல்ல தண்ணீரும் ஊர் கிணற்றில் உப்பு தண்ணீரும் கிடைக்கும்.

குடிப்பதற்கு சாலை கிணற்றையும், பழங்குவதற்கு  ஊர் கிணற்றையும் பயன்படுத்தினார்கள்.

அந்த காலங்களில் பெரிய விவசாய குடும்பம் இருக்கும், கமலைக்கு, வண்டிக்கு, உழுவதுக்குன்னு பத்து பதினைந்து மாடும், பாலுக்காக ஐந்தாரு பசுவும் நிற்க்கும்,

அவ்வளவு ஜீவன்களுக்கும் தண்ணீர் கொடுத்தது உப்பு தண்ணீர் கினறு தான்.

ஆண்கள் வீட்டில் குளிக்க மாட்டார்கள், ஊர் கிணற்றில் தான் குளிப்பார்கள்.

"ஏய் மச்சானுக்கு இரண்டு வாளி ஊத்து" என முறை பெண்ணிடம் வம்பு இழுப்பதும் நடக்கும்.

எங்கள் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது,

அதாவது திருமணமான மணப்பெண் கணவன் வீட்டிற்கு வந்தவுடன் முதலில் செல்வது கோவிலுக்கும், பின்பு செல்வது ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தான்.

புதிய பானையை எடுத்துக் கொண்டு தோழிகளுடன் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு செல்ல வேண்டும்.
பாக்கு வெற்றிலை வாழைப்பழம் பத்தி வைத்து கிணற்றடியில் சாமி கும்பிடுவார் அந்த மணப்பெண், பின்பு அந்த வெற்றிலையை கிணற்றிற்குள் போடுவார்.

வெற்றிலை  தண்ணீருக்குள் எப்படி சென்று விழுகின்றது என்பதை வைத்து அந்தப் பெண்ணிற்கு என்ன குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொல்வார்கள். 

வெற்றிலை குப்புற விழுந்தாள் ஆண் பிள்ளை, மாறாக மல்லாக்க பார்த்து விழுந்தால் பெண் பிள்ளை.

இந்த சடங்குகள் முடிந்து தண்ணீர் இறைச்சிட்டு வரனும்.

கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் பொழுது  கயிறு அறுந்து வாளி கிணற்றுக்குள் விழுந்துவிடும். விழுந்த வாளியை எடுக்க பாதாள கரண்டி என்ற ஒரு கருவியை பயன்படுத்துவார்கள்.

அந்தப் பாதாள கரண்டியை அங்கு உள்ள ஒரு கடையில் வாடகைக்கு விடுவார்கள்.

அதை எடுப்பதை வேடிக்கைபார்க்க பெரிய கூட்டம் நிற்க்கும். தொலைந்த வாளியுடன் போனசாக சில வாளிகள் கிடைக்கும்.

வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இளம் பெண்கள் தலையில் பூ வைத்துக்கொண்டு தண்ணீர் இறைக்க  வரமாட்டார்கள்.

கிணற்றுக்குள் தண்ணீர் மட்டும் இருப்பதில்லை பேய்களும் இருக்கும் என்று நம்புவதால்.

பெரும்பாலான தற்கொலைகள் அந்தக் கிணற்றுக்குள் குதித்து தான் நடந்திருக்கும்.

எங்கள் ஊர், ஊர் கிணற்றில் பல தற்கொலைகள் நடந்திருந்தன.

கணவனை இழந்த  பெண் வெள்ளைச் சேலை அணிந்து தனது கை குழந்தைக்கு பால் கொடுத்த பொழுது, வெள்ளைச் சீலை  அணிந்திருந்ததால் தாயின் அடையாளம் தெரியாமல் பால்குடிக்க கை குழந்தை மறுத்து விட்டது. அதனால் குழந்தையுடன் சென்று கிணற்றுக்குள் விழுந்து இறந்த சம்பவம் எங்கள் ஊரில் உண்டு.

என் சிறுவயதில் "வெள்ளைச் சீலக்காரி   பேயா அலையுதா அங்கே போகாதே" என்று என்னை பயம் காட்டுவார்கள்.

நான் கூறுவேன் "அது என் பெரியம்மா தான் என்னை ஒன்றும் செய்யாது" என்று கூறுவேன்.என் அம்மாவின் பெரியம்மா மகள் தான் தற்கொலை செய்தவர்.

நான் மிக சிறு பையனாக இருந்த பொழுது ஒர் வழக்கம் எங்கள் பகுதியில் உண்டு. இது அறிவியலுக்கு புறம்பானது தான்.

அதாவது, பாடை எழுப்பி விடுதல் என்று இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட பெண் யார் மீதாவது பேயாக வருவார். 

பேயை விரட்ட கோடாங்கி வருவார், கோடாங்கி அடித்து பேயை போகச்சொல்வார். பேய் முதலில் மறுக்கும் பின்பு, "பாடை எழுப்பி விட்டால் போய் விடுகிறேன்" என்று கூறும்.

அதற்க்காக ஒர் நாள் குறிப்பார்கள், மூன்று நாளா கோடாங்கி அடிப்பார்கள்.

மூன்றாவது நாள் தான் அந்த பாடை எழுப்புதல் நிகழ்ச்சி நடக்கும்,

தற்கொலை செய்து கொண்ட நபர் இறந்த அன்று என்னவெல்லாம் செய்தாரோ, அதை எல்லாம் பேய் பிடித்த பெண் செய்வார். இறந்தவர் அன்று மாட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்தால் அந்த இடத்திற்க்கு சென்று புல் அறுப்பது போல் பாவனை செய்யும். இறக்க முடிவு செய்து விட்ட பின் தனது குழந்தைகளிடம் எப்படி எல்லாம் அழுதாரோ அதே போல் தனது குழந்தைகளை கட்டி பிடித்து அழுவார்.

தற்கொலை செய்த அன்று யார் வீட்டிற்க்கெல்லாம் சென்றாரோ, எல்லா வீட்டிற்க்கும் செல்வார்.

கடைசியில் அந்த பேய் பிடித்த பெண்னை கோடாங்கி மேளம் அடித்தவாறு ஊர்வலமாக தற்கொலை நடந்த கிணற்றிற்க்கு அழைத்து வருவார்கள். அந்த பெண்ணும் ஆடிக்கொண்டே வருவார்.

கினற்றுக்குள் சில இளைஞர்கள் நிற்ப்பார்கள், ஒரு கட்டில் நான்கு முனைகளிலும் கயிறு கட்டி ரெடியா இருக்கும்.

கிணற்றில் விழுவதற்க்கு முன்பு இறந்த நபர் எப்பபடி எல்லாம் சொல்லி அழுதாறோ அதே போல் அழுவார் பேய் பிடித்த நபர்,

இங்கே பெரிய சென்டிமென்ட் நடக்கும், 

மற்றவர்களுக்கு இது வேடிக்கை. ஆனால் தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தார்கள் குழந்தைகள் சொல்ல முடியாத வேதனையில் இருப்பார்கள். இதை பார்த்து அழுது கொண்டிருப்பார்கள். நமக்கும் அழுகை வரும்.

கடைசியாக போகிறேன், என கிணற்றுக்குள் பேய் பிடித்த பெண் விழுவாள்.

கினற்றுக்குள் தயாராய் நிற்க்கும் இளைஞர்கள் அப்பெண்னை மீட்ப்பார்கள், கட்டிலை கினற்றுக்குள் விடுவார்கள்,

அந்த பெண் மீட்க்கபடுவாள்.

கோடாங்கி அப்பெண்னுக்கு திரு நீரு பூசுவார்.

கிணற்றின் ஓரத்தில் ஒர் குத்துக்கல் நடுவார்கள், அதற்க்கு சந்தனம் பூசி குங்குமம் வைத்து மாலையிடுவார்கள்.

தற்கொலை செய்த பெண் தெய்வமானதாக கூறுவார்கள்.

இன்றும் சில கிணறுகள் அருகில் இப்படி ஊன்ற பட்ட கல்கள் இருக்கின்றது.

இது நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, ஆனால் இதை பயத்துடன் வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

பல நூறு பேரின் உழைப்பில் உருவான கிணற்றை ஒற்றை JCP வண்டி சில நிமிடத்தில் மூடி விடலாம்.

ஆனால் என் போன்றவர்களின் நினைவுகளில் எப்பொழுதும் வற்றாமல் கொடுத்த கிணற்று நீர் போல் நின்று கொண்டேயிருக்கும்.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.Com.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments

Popular posts from this blog

மனிதம்

ம னி த ம் எனது அடுத்த கதையை பதிவிட்டுள்ளேன், நேரமிருந்தால் படியுங்கள். "ஏய் சன்னாசி காலங்காத்தால கருவாட்டு வதக்கி  உன் பொண்டாட்டி கொடுத்திருக்கா போல" சைக்கிளுக்கு ஏர் பிடித்துக்கொண்டிருந்த சன்னாசியிடம் கேட்டார் பட்டாளத்துக்கார செல்லையா நாடார். "முதலாளி உம்ம மாதிரி நான் என்ன பொன்னி அரிசியா  சாப்பிடுறேன், லபக்குன்னு உள்ள போக, இந்த ரேஷன் அரிசிக்கு காரசாரமா கருவாட்ட கிருவாட்ட வெச்சு சாப்டா தானே உள்ளே இறங்குது." என்றான் சன்னாசி. "காலங்காத்தால அவன் கிட்ட வம்பிழுக்கிறிகளே மாமா" என்றாள் சைக்கிள் கடை பூமாரி,  பூமாரி வீட்டுக்காரன் ஜெயம் பட்டாளத்துக்காரருக்கு சின்னையா பேரன், அனந்தர சொக்காரன் அவன் ஊர் பள்ளிகூடத்துல சத்துணவு அமைப்பாளரா இருக்கான். "எம்மா பூமாரி உங்க மாமா என் வீட்டு கூரைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்து பார்த்தது மாதிரியே சொல்லுதாறு பாரும்" என்றான் சன்னாசி   "உனக்கும் வேலையில்ல உங்க முதலாளிக்கும் வேற வேலையில்லை என்றாள்" பூமாரி "முதலாளி என் பொண்டாட்டி கருவாட்ட வதக்கி வச்சிறுக்கான்னு எப்படி கரெக்டா  சொன்னிங்க" என்று கேட்டான் சன்னா...

மூணு கால் நாய்

மூணு கால் நாய் "மூணு கால் நாய்,  என்ற பெயரில் என் சிறு கதை. ஒத்த நாள் கூட பிரிந்திருந்ததில்லை. உலகத்தை விட்டுப் போய் இன்னோட மூணு நாளாச்சு. மனதளவில் கொலஞ்சி போயிருந்தார் உலகநாதன். பதினைந்து நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கும்போதே கிறுகிறுன்னு வருதுன்னு சொல்லி கீழே விழுந்தா.  தென்காசி திருநெல்வேலி மதுரைன்னு ஆம்புலன்ஸில் சுத்தி கடைசில  பொணமாத்தான் இலஞ்சிக்கு வந்தாள் கோமதி. நோய்க்கு புரியாத பேர வச்சிருக்கான், நோய கண்டுபுடிக்க மெஷின் வச்சிருக்கான், ஆனால் நோய குணமாக்குற மருந்து மட்டும் இல்லைங்கிறான்.  உலகநாதன் பதினைந்து நாள் போராடி பார்த்தார், கடைசியில ஒன்னும் நடக்கல இறந்து போகக் கூடிய வயதும் இல்லை. ஆடி மாசம் வந்தா ஐம்பத்தைந்து வயசு ஆகுது. சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னு பிறந்தாள். அதனாலே கோமதின்னு பெயர் வச்சாங்க. மூச்சி விடுததுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட புருஷன நினைச்சி தான் புலம்பினா. "உங்க அப்பாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துட்டேன், அவர நெனைச்சா பாவமா இருக்குடா, அவர சோத்துக்கு கையேந்த வச்சிராதிங்கடா" என கை எடுத்து கும்பிட்டு கேட்டாள். ____ உலகநாதன் வேளாண் துறைய...

மாட்டு வண்டி பாதையிலே

மாட்டு வண்டி  பா தை யி லே தென்றலின் தலைவாசல் பாம்புக்கோவில் சந்தை, குற்றாலத்திற்க்கு ரயிலில் வருபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்துக்குள்ள வண்டி வரும் பொழுது தென்றல் நம்மை வரவேற்க்கும். மெல்லிய தூறலும், ஜிலுஜிலு காற்றுடன் இதமான காலையாக இருந்தது அந்த காலை நேர பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். பாம்புக்கோவில் சந்தையில் ரயில் இரண்டு நிமிடம் மட்டும் தான் நிற்க்கும். எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இறங்கினார் ஜெயச்சந்திரன் அவர் பின்னாலே இறங்கிய உமா "சித்தப்பா போயிட்டு வரேன்"என்றார்.  "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் விடைகொடுத்தார் ஜெயச்சந்திரன். சொந்த பெரியா மகன் புள்ள, அனந்தர சொக்காரன் மகா. அப்படியிருந்தும் நின்று பேச நேரம் இல்லாதது போல் வேகமாக வெளியே நடந்தார் ஜெயச்சந்திரன். உண்மையிலே நேரம் இருந்தாலும் அவர் இப்படித் தான் செய்வார். இது அவர் குணநலம்,  வாழ்க்கை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என எண்ணுபவர். இது தான் தனி மனிதனுடைய வெற்றிக்கான பார்முலா  என்று வாழ்ந்து வருபவர்.  "நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை பற்றி அசை போட்டால் எதிர்...