Skip to main content

தாய் வழிக்கல்வி

தாய் வழிக்கல்வி

தாய் வழிக்கல்வி என்ற எனது சிறுகதை முடிந்தால் படியுங்கள்.

"ஏமோ எனக்கு பனிரெண்டாம் தேதிக்குள்ளஆயிரம் ரூபாய் வேண்டும்" என்றான் அருண்.

அருண் கேட்டதை கவனிக்காதது போல்

"அண்ணாச்சி நேத்து நாலு டீக்கு  கொடுக்கணும் இப்போ ஒரு டீ மொத்தம் நாற்ப்பது ரூபாய்" என கூறியவாறு சங்கரலிங்கம் கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு மீதம் பத்து ரூபாயை கொடுத்தாள் அன்னக்கிளி.

கன்னியா குமாரி அருகே ஒர் கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான கோவில் தெருவில் டீ கடை நடத்தி வந்தாள் அன்னக்கிளி. 

அருணுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது அண்ணக்கிளியின் கணவர் இறந்து விட்டார்.

கணவர் கண்ணுக்கு பின் அப்பாவுடன் சேர்ந்து இந்த டீ கடையை நடத்தி வருகிறாள்.

அருன் நாகர்கோவில் ஒர் பால் டெக்னிக்கில் இறுதியாண்டு படித்து வருகிறான்.

"ஏம்மா நான் சொல்றது உனக்கு காதுல விழலையா" கொஞ்சம் அழுத்தமாக கேட்டான் அருண்.

"அதெல்லாம் விழுந்தது, போன வாரம் தானடா ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு போனே, அதுக்குள்ள ஆயிரம் ரூபா கேட்கிறியே  அதான் யோசிச்சுக்கிட்டு, இருக்கேன்", என்றாள் அன்னக்கிளி.

"ஏய் இரண்டாயிரம் வாங்கும்போது இனிமே பீஸே கிடையாதுன்னு தானே சொன்ன இப்ப புதுசா ஆயிரம் ரூபா கேட்க" என்றார் அருணின் தாத்தா ராமையா.

"இது பீஸ் கிடையாது. திருநெல்வேலியில் பதினைந்தாம் தேதி பர்சனாலிட்டி டெவலப்மென்ட் ட்ரெயினிங் நடக்கு. அதுல கலந்துக்க தான் ஆயிரம் ரூபா கேட்டேன்" என்றான் அருண்.

"அப்படின்னா என்னடா" என கேட்டார் தாத்தா.

"சொன்னா உமக்கு புரிய போவுதா. நீர் படிச்சதையும் உம்மா மவா படிச்சதயும் கூட்டுனா கூட எட்டு வராது. உம்ம வேலைய மட்டும் பாரும்" என்றான் அருண்.

"இப்ப அவர்கிட்ட ஏன் கோபபடுற, என்ன டிரைனிங் என கேட்டது தப்பாடா" என கேட்டாள் அன்னக்கிளி.

"தன்னம்பிக்கை, மன உறுதி, எப்படி வாழனும் என பல விசயம் சொல்லி கொடுப்பாங்கம்மா அது தான் டிரைனிங்" என்றான் அருண்..

"டேய் இதுக்கெல்லாமா டிரைனிங் கொடுப்பாங்க" என்றவள்,

"ஒன்னாம் தேதி கொடியேருது, எட்டாம் தேதி திருவிழா. இந்த எட்டு நாள்ள பத்து ரூபாய்க்கு மேல விற்கும்ன்னு நெனைக்கேன். 

பாய்லர் ஒழுகுது அத மாத்தனும் அதுக்கு ஐஞ்சு ரூபா ஆயிடும், கடையில வேலையிருக்கு அதுக்கும் ஐஞ்சு ரூபாய் ஆயிடும் மிச்சம் வருத பணத்தில ஆயிரம் தாரேன் நீ ஒழுங்கா படி" என்றாள் அன்னக்கிளி.

__

கொடியேறுவதுக்கு முதல் நாள் புடிச்ச மழை பத்து நாளா விடல, எதிர் பார்த்த அளவு கூட்டம் திரு விழாவிற்க்கு வரல.

ஏமாற்றத்தை காட்டாமல் சிரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தாள் அன்னக்கிளி.

அருன் அப்படியல்ல விரக்தியில் எதெற்க்கெடுத்தாலும் எறிந்து விழுந்தவாறு இருந்தான்.

திருவிழா முடிந்து கொடியும் இறங்கிடுச்சி மொத்த ஐயாயிரம் கூட தேரல. 

மகன் கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லையே என மனதில் வருத்தப்பட்டாள் அன்னக்கிளி.

இனி நாம் டிரைனிங்குல கலந்துக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து கடையில் அமர்ந்திருந்தான். அப்பொழுது டீ பட்டறைக்கும் சோடா ஸ்டாலுக்கும் நடுவுல ஒர் பை கிடப்பதை பார்த்தான்.

"எம்மா இங்க ஒரு பை கிடக்குது பாரு" என்றான் அருண்.

"அதை எடுத்து பார்" என்றாள் அன்னக்கிளி.

சுருட்டிய நிலையில் இருந்த அந்த பையை எடுத்து திறந்து பார்த்தான் சில பண கட்டுகள் இருந்தன.

"பையில பணம் இருக்கும்மா" என்றான் அருண்..

"டேய் விளையாடத உண்மைய சொல்லு" என்றாள் அன்னக்கிளி.

"நெசமா தான் சொல்லுறேன்" என கூறி அன்னக்கிளியிடம் பையை காட்டியவன் பணத்தை எடுக்க போனான்.

அருணின் கையை ஒங்கி தட்டிய அன்னக்கிளி "யாரு பணமோ தெரியல, இத தொடாதே. உள்ள கோவில்ல போய் சொல்லிட்டு போலீஸ்கிட்ட கொடுத்துடு" என்றாள்.

எப்படியும் லட்ச ரூபாய் இருக்கும் நாம் ஆயிரம் ரூபாய்க்கு வழியின்றி இருக்கோம் என்ற ஏக்கத்துடன் பணத்தை போலீஸில் ஒப்படைத்தான் அருண்.

செத்த நேரத்துல தெக்கூர் மாட்டு வியாபாரி செல்வம் டீ கடைக்கு வந்தார்.
"அன்னக்கிளியக்கா நான் கும்புடுற சாமி மாதிரி உண்னை பார்க்கேன். பணம் காணாமல் போனதுல இருந்து கிறுக்கு புடிச்சவன் மாதிரி இருந்தேன். உன் மகன் தான் போலீஸ்ட்ட வந்து கொடுத்தாம்ன்னு சொன்னாங்க நீயும் உன் மகனும் நல்லா இருக்கனும்கா" என்று கூறிய செல்வன்.

நாலு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அருணின் கையில் வைத்தான்.

"ஏலே அத வாங்காத", என்றவள் "எடுத்து கொடுத்ததுக்கு கமிஷனா" என்றாள்.

"இல்லக்கா தம்பி படிப்புக்கு ஆகும் வாங்கிக்க சொல்லுக்கா" என்றார் செல்வம்.

"அவன் படிப்ப முடிச்சிட்டான், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ பணத்தை ஞாபகமாக வச்சி பழகு" என்றாள் அன்னக்கிளி.

அன்னக்கிளி பிடிவாதமாய் இருப்பதால் வாயால் நன்றி மட்டும் சொல்லி விட்டு சென்றான் செல்வம்.

"ஏம்மா நீ தான் பணம் தரல அவர் கொடுத்ததையும் வாங்க விடாம ஆக்கிட்ட, அத வாங்கியிருந்தால் உன் பிரச்சனையும் தீர்திருக்கும் நானும் பணம் கட்டி டிரைனிங் போயிருப்பேன்" என்றான் அருண்.

"என் பிரச்சனையை கடவுள் தான் தீர்க்க முடியும். ஒழுங்கா படிக்க வேலைய மட்டும் பாரு" என்றாள் அன்னக்கிளி.

இரவு டீ கடையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் அருண்.

அப்பொழுது அங்கு ஒர் போலீஸ் வந்தார்,
"தம்பி உங்க அம்மாவை கூப்பிட்டுகிட்டு நாளை காலை பத்து மணிக்கு நாகர்கோவில் எஸ்.பி ஆபீஸிற்க்கு வா" என்றார்.

-------

நாகர்கோவில் எஸ்.பி.ஆபீஸிற்க்கு அருண், அன்னகிளி இருவரும் சென்றார்கள்.எஸ்.பி.ஆபிஸிற்க்குள் சென்று, எஸ்.பி.அபீஸின் வரவேற்ப்பறையை அடைந்த பொழுது, அங்கே மாட்டு வியாபாரி செல்வம் இருப்பதை பார்த்தான் அருண்.

செல்வத்தை பார்த்தவுடன் தாங்கள் எதற்க்காக அழைக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொண்டான் அருண்.

சிறிது நேரத்தில் எஸ்.பி.யின் அறைக்குள் மூவரும் அழைக்கப்பட்டார்கள்.

கொங்கு தமிழ்  பேசினார் அந்த இளம் வயது எஸ்.பி.

"அம்மா உங்கள் செயல் உண்மையிலே பெருமைக்குறியது. அதே நேரம் இவர் கொடுத்த பணத்தை வேண்டாம் என கூறியது அதிர்ச்சியளிக்கிறது, எனக்காக அந்த பணத்தை வாங்கி கொள்ளுங்கள்". என்றார் எஸ்.பி.

"மன்னிச்சுக்கொங்க இதுக்கு தான் நீங்க கூப்பிட்டிகன்னு தெரிஞ்சால் வந்திறுக்க மாட்டேன். என் உழைப்பிற்க்கு உரிய ஊதியத்தை மட்டுமே பெற வேண்டும் என எண்ணுகிறேன்.

தயவு செய்து இதற்க்கு மேல் கட்டாய படுத்த வேண்டாம்" என்றாள் அன்னக்கிளி.

அன்னக்கிளியின் பேச்சு ஆயிரம் புத்தகம் சொல்லி தராத ஏதோ ஒன்றை எஸ்.பிக்கு சொல்லி தந்தது.

சான்றிதழ் கொடுத்து சால்லை அணிவித்து அன்னக்கிளியை கெளரவ படுத்திய பொழுது அவரை அறியாமலே அன்னக்கிளியின் காலில் விழுந்து வணங்கினார் எஸ்.பி.

அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம், ஒர் அதிகாரி சாதாரண டீ கடை பெண்ணின் காலில் விழுந்ததை பார்த்த பொழுது.

மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு அருணை மட்டும் உள்ளே இருக்க சொன்னார் எஸ்.பி.

"நான் உன் குடும்ப விபரத்தை கேட்டு தெரிந்தேன்.

அதே போல் டிரைனிங் கிளாஸில் கலந்து கொள்ள முடியாமல் போவதால் நீ வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய் என்பதையும் கேள்விப்பட்டேன்" என்றவர்

"டிரைனிங் கிளாஸை எடுப்பது யார் தெரியுமா?" எனக்கேட்டார் எஸ்.பி.

"தெரியாது சார்" என்றான் அருண்.

"அன்று வகுப்பெடுக்க போவது நான் தான். நான் நிணைத்தால் நீ கலந்து கொள்ள ஏற்பாடு செய்து தர முடியும். ஆனால் செய்ய மாட்டேன்" என்றவர்.

"நான் எதை சொல்வி கொடுக்க போகிறேன். தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி இந்த இரண்டையும் தான.

கை குழந்தையான உன்னை தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி செய்து போராடி  வளர்த்த உன் தாய் சொல்லி கொடுக்காத ஒன்றை நான் என்ன சொல்லி தர முடியும் .

சத்தியமாக ஒன்றை சொல்கிறேன், நேர்மை என்ற ஒன்றை உன் தாயை தவிற என்னால் கற்று தரவே முடியாது" என்று கூறினார் எஸ்.பி.

எஸ்.பி.யிடம் விடை பெற்று வெளியே வந்தான் அருண். அப்பொழுது அவன் நன்பன் தர்ஷன் செல் போனில் அழைத்தான்.

"டேய் பதினைந்தாம் தேதி டிரைனிங்கில கலந்து கொள்கிறாயா, நான் வேணும்ன்னா பணம் கட்டுறேன்டா" என்றான் தர்ஷன்.

"நான் அந்த டிரைனிங்க ஏற்க்கனவே முடிச்சிட்டேன்டா" என்றான் அருண்.

ஒன்றும் புரியாமல் விழித்தாள் அன்னக்கிளி.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.C.om.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments