Skip to main content

செவ்வந்தி.


கூனன் கிணற்றை சுடலை அக்கா பேரன் வெள்ளையன் வாங்கியிருந்தான். அத ப்ளாட் போட முடிவு செய்திருந்தான்.

"பேரப்புள்ள அந்த கிணத்துல வேப்ப மரத்தடியில ஒர் கல் நட்டிருக்கும், அத புடுங்கி தூற போட்டுறாத, அந்த கல்ல இங்க கொண்டா" என்றார் சுடலை.

"அந்த கல்லு உமக்கெதுக்கு" என கேட்டான் வெள்ளையன்.

"தாத்தாவுக்கு வேணும்யா" என கேட்டார் சுடலை.

____________

அந்த கல்லுக்கும் சுடலைக்கும் ஐம்பது வருட பந்தம்.

நினைவு பெட்டகத்தில் பொத்தி வைத்திருந்த நினைவலயில் மூழ்கினார் சுடலை.

----------

பக்கத்துல எங்கயோ கோடாங்கி அடிக்கும் சத்தம் கேட்டது.

"இந்த ஐப்பசி, கார்த்திகை வந்துட்டா போதும் நம்மள ஒரங்க விடமாட்டாங்க, நாட்டுல இருக்க பேயெல்லாம் இந்த நாலு தெருவுக்கு மொத்தமா வந்துரும்" என்றான் சுடலை.

சுடலை பேசிக்கொண்டே எலி பொறிக்கு டயரை அருத்துக்கொண்டிருந்தான்.

இந்த சுற்று வட்டாரத்தில் வயக்காட்டுல எலி புடிக்கதுல சுடலைய மிஞ்ச ஆளே இல்லை. கார்த்திகை மார்கழியில நெல்லுல கருது வர ஆரம்பிக்கும், கூடவே எலியும் வந்திடும். சுடலைக்கு அப்ப மவுசு தான் கொஞ்சம் வருமாணமும் கிடைக்கும். மற்ற காலத்தில துணி தொவைக்கிறது, தேய்கிறதுன்னு வேலைய மாத்திக்குவான்.

"ஐப்பசி கார்த்திகை மாதத்தில தான் பேய் வருமா" என கேட்டாள் சுடலையின் அக்கா மகள் மயில்.

"அதல்லாம் ஒன்னுமில்ல ஐப்பசி கார்த்திகையில நெல் நடுவ அதிகம் நடக்கும், நடுவைக்கு போறவகளுக்கு கொலவ துட்டும் பூவும் கொடுப்பாங்க, பூவ தலையில வச்சிக்கிட்டு வரும் போது காடு கரையில செத்ததுக
பூ வாடைக்கு பின்னாலே வந்துரும்" என்றாள் சுடலையின் அம்மா ஈஸ்வரி.

"சரி யாருக்கு வந்திருக்காம்" என அவன் அம்மாவிடம் கேட்டான்.

"கடக்கரை அய்யா மகள் செல்விக்காம் பேசிக்கிட்டாள்வ" என்றாள் ஈஸ்வரி.

"நான் போய் பார்க்க போறேன்" என கூறினாள்" மயில்.

"நீ போ உன்னைய புடிக்க போவுது" என்றான் சுடலை.

"மாமோ நான் வண்ணரமாடன் ஆடும் மாடசாமி பேத்தியா, என்னை கண்டா பேய் தெக்காலயும் வடக்காலயும் தெறிச்சி ஒடிடும். எங்க தாத்தா ஆடிவரும் பொழுது அத்தனை பேயயையும் கம்புக்கூட்டுக்குள்ள அமுக்கி வச்சிட்டு வருதவரு" என கூறியவாறு சென்றாள் மயில்.

-------------

இரண்டு நாளா கோடாங்கி அடி நடந்தது, கடற்கரை வீட்டின் சைடில் இருந்த டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான் சுடலை.

"ஆமாம் ரெண்டு நாளா அடிக்காங்களே யாருன்னு சொல்லிச்சா" என டீ கடை முனியாண்டி கிட்ட கேட்டான் சுடலை.

"கோடாங்கி தேய்ஞ்சது தான் மிச்சம், வாய் திறக்க மாட்டேங்க" என்றார் டீ கடை முனியாண்டி.

"யாருன்னு சொல்லு" என பாடிக்கிட்டே கோடாங்கி அந்துக்கொண்டிருந்தான் கோடாங்கி.

டீய குடிச்சிட்டு கடக்கரை வீட்டு வாசல்ல நின்னு எட்டி பார்த்தான் சுடலை. ஆட்கள் கூட்டமா நின்னதால சரியா தெரியல, வீட்டுக்குள் போனான்.

செல்வி தலைய விரிச்சி போட்டு சம்மணம் கூட்டி தலைய ஆட்டிக்கிட்டிருந்தா.

விபூதியை அவள் மீது வீசியவாறு "நீ யாருன்னு சொல்லப்போறியா, இல்லையா" என கேட்டான் கோடாங்கி.

ஆடிக்கொண்டிருந்தவள் சட்டென்று நிறுத்தினாள், கலைந்து கிடந்த முடியை சரி செய்தவாறு சுடலையை பார்த்தாள்.

அவள் பார்வை சுடலையின் உள்ளுணர்வை உலுக்கியது.

"நான் செவ்வந்தி வந்திருக்கேன்" என்றாள் செல்வி.

"எந்த செவ்வந்தி நீ" என கேட்டான் கோடாங்கி.

எந்த செவ்வந்தி என்பது சுடலைக்கு புரிந்தது, பத்தாண்டாக மறக்க முடியாமல் துன்பப்படும் அதே செவ்வந்தி, சுடலையால் அதற்க்கு மேல் அங்கு நிற்க்க முடியவில்லை. வெளியே வந்தான்.

------------

வீட்டுக்கு வந்தான் ஆனால் அவன் மனம் நிலை கொள்ளல, அடிக்க கோடாங்கி சத்தம் மூளைய பிசைந்தது.

செவ்வந்திய பத்திய நினைவு அவனை சூழ்ந்தது.

------

நாலு வருஷம் அப்பன்கிட்ட கோவச்சிக்கிட்டு கேரளா போய் இருந்தவன். திரும்பவும் ஊருக்கு வந்திருந்தான் சுடலை, சுடலைக்கு அப்ப சரியா பதிணைட்டு வயது கூட ஆகல.

கேரளாவிலிருந்து கொண்டு வந்த ரூபாய்ல ஒரு புது சைக்கிள் வாங்கியிருந்தான்.

சுடலை சைக்கிள்ள பயங்கர வேகமா போவான், பள்ளிக்கூடத்து தெரு முக்குல கார வீட்டு தங்கத்துரை வீட்டுக்கிட்ட வேகமாக வரும் பொழுது குறுக்க வந்த கோழி மேல எத்திட்டான், 

அது பெரிய பிரச்சனையாயிருச்சி, அன்னையில இருந்து முக்கு திரும்பும் பொழுது பெல்லடிச்சி மெதுவா தான் திரும்புவான்.

கார வீட்டு தங்கத்துரை வீடு தெருவரைக்கும் இருக்கும், அந்த வீட்டின் முன்னால் ஒர் ஜன்னல் இருக்கும்.

முதன் முறையாக அந்த கண்ணை அந்த ஜன்னல் வழியா தான் பார்த்தான்.

அவன் வண்டியில் பெல் சத்தம் கேட்டவுடன் ஜன்னல் வழியே வந்து அந்த கண்கள் அவனை பார்க்கும்.

---------------

கார வீட்டு தங்கத்துரை வீட்டு துணியை சுடலையின் அப்பா வெள்ளையன் தான் வெளுத்தார்.

"துணிக்கரவககிட்ட துணிய கொடுத்துட்டு சோத்த வாங்கிட்டு வா" என்றாள் சுடலையின் அம்மா ஈஸ்வரி.

துணி மூட்டையை எடுத்துக்கிட்டு கையில தூக்கு சட்டிய எடுத்தவாறு சென்றான்.

கார வீட்டு தங்கத்துரை வீட்டுக்குள் நுழைந்தான்.

"ஏம்மா ஏகாளி வெள்ளையன் மகன் சுடலை வந்திருக்கேன்" என்றான் சுடலை.

ஸ்கூல் யூனிபார்மில் இருந்த ஒர் மானவி வந்தாள். நல்லாயிருந்தா பதினாரு வயதிருக்கும்.

ஜன்னல் வழியே பார்க்கும் அதே முகம். 

"உங்க அம்மாவ வரச் சொல்லுங்க, துணிய எண்ணிக்கொங்க" என்றான் சுடலை.

தங்கத்துரை வீட்டம்மா பார்வதி ஒரு சட்டியில சோற எடுத்துட்டு வந்தா.

"ஏய் செவ்வந்தி அந்த நோட்ட பார்த்து துணிய எண்ணு" என்றாள் பார்வதி.

அவள் பெயர் செவ்வந்தி என்பதை தெரிந்து கொண்டான் சுடலை.

பார்வையில் ஆரம்பித்து பேச்சில் தொடர்ந்தது.

சோறு எடுக்க வந்த பொழுது மாடியில் நின்ற செவ்வந்தி புல் ரோசாவை பறித்து யாரும் பார்க்காத நேரத்தில் சுடலை மீது ஏறிவாள்.

ஒரு முறை துணிய கொடுக்க போயிருந்தான்,

"ஏய் சுடலை உங்க அப்பன் கூட நீயும் எலிக்கு பொறி வைக்க போறியாமல" என வீட்டுக்குள் இருந்து கேட்டாள் பார்வதி.

"ஆமாம்மா" என்றான் சுடலை.

அப்பொழுது சோறு கொண்டு வந்து போட வந்தாள் செவ்வந்தி

"உங்க பொறியில எலி விழுந்துச்சோ இல்லையோ, நான் விழுந்துட்டேன்" என சுடலைக்கு மட்டும் கேட்க்கும்படி கூறினாள் செவ்வந்தி.

இந்த புள்ள பேசுறது பார்க்கிறது நல்லாயிருக்கு மகிழ்ந்தான். ஆனால் வெளியில் தெரிந்தால் அவ்வளவு தான் என மிக பயந்தான்.

இப்படி ஒரு வருஷம் ஆகிடுச்சி ஒருநாள் குளத்தில துணி துவச்சிக்கிட்டிருந்தான் சுடலை, வேறு யாருமில்லை.

செவ்வந்தி அங்கே வந்தாள்.

"எனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டாங்க, நீங்க எங்க வீட்டுல வந்து பேசனும்" என்றாள் செவ்வந்தி.

"நீ பேச வேண்டியது தான" என கேட்டான் சுடலை,

"எனக்கு பயமாயிருக்கு, நான் கேட்டுக்கிட மாட்டேன்" என்றாள் செவ்வந்தி.

"உன்னாலே கேட்க்க முடியாதுன்னா, ஏகாளி வீட்டு பையன் நான் எப்படி கேட்க்க" என கூறினான் சுடலை.

செவ்வந்தி அழ ஆரம்பித்தாள்.

"அழுகை எதையும் தீர்க்காது நீயே உன் வீட்டில் பேசு" என்றான் சுடலை.

குளக்கரையில் ஆட்கள் வருவதை பார்த்த செவ்வந்தி.
"எனக்கு ஒன்னும் புரியல நீங்க தான் ஒர் முடிவெடுக்கனும்" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

கண்களால் ஆரம்பித்த காதல் பயத்தால் முடிவுக்கு வந்தது.

பக்கத்து ஊர் மாப்பிள்ளைக்கு கல்யாணம் முடிஞ்சிது,

செவ்வந்தியின் நிழலைக்கூட சுடலை தொட்டிருந்ததில்லை.

கொஞ்ச நாள் சுடலை வருத்தமாயிருந்தான், பிறகு சரியானான்.

சரியா ஒரு வருஷம் கழிச்சி சுடலை காத்துல செவ்வந்திக்கு புருஷன் சரியில்லைன்னு ஒரு செய்தி வந்துச்சி.

எப்பவும் குடிக்கிறதும் அடிக்கிறதுமா இருப்பானாம், ஊருக்கு ஒரு வப்பாட்டி வேறாம்.

இத கேக்கும் பொழுது மனதில் வருந்தினான் சுடலை.

அடிக்கடி கோவச்சிக்கிட்டு ஊருக்கு வந்திவா செவ்வந்தி.

அது மாதிரி ஒரு முறை வந்த செவ்வந்தி சுடலை தேய்க்கும் வண்டிகிட்ட வந்தாள்  
"என் வாழ்க்கை நாசமாயிருச்சி, இனி என்னால அங்க வாழ முடியாது. 
இனி நீங்க தான் என் வாழ்வு என முடிவு செய்து வந்துள்ளேன். எனக்கு ஓர் முடிவை சொல்லுங்க, எங்காவது ஒடிப்போய் வாழ்வோம்" என்றாள்.

"நாளைக்குள் முடிவை சொல்லுங்கள்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாள்.

சுடலைக்கு குழப்பத்தை விட பயம் அதிகமிருந்தது, செவ்வந்தியின் கேள்விக்கு முடிவு சொல்ல முடியாமல் அன்று தேய்க்கவும் போகாமல் வெளியூருக்கு சென்று விட்டான்.

இரண்டு நாள் கழித்து வந்தான், வரும் பொழுது செவ்வந்தி கூனன் கிணத்தில் விழுந்து இறந்து போனாள் என்பதை கேள்விப்பட்டு அதிர்ந்து போனான்.

செவ்வந்தியின் நினைவால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்.

இன்று பெரும் குழப்பத்திற்க்கு ஆளானான், பார்த்தது செல்வியா, செவ்வந்தியா அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

_________

"பேய் பாட எழுப்ப சொல்லுச்சி" என தன் ஆச்சி ஈஸ்வரியிடம் கூறிய மயில்

 "ஆச்சி பாட எழுப்பி விடுததுன்ன என்ன" என கேட்டாள்.

"பாட எழுப்ப ஒரு நாள் குறிப்பாங்க, அன்னைக்கு அவள் செத்த அன்னு என்னல்லாம் செய்தாளோ அதே எல்லாம் திரும்ப செய்து காட்டுவா அதே கிணத்துல விழுவா,

ஆட்கள் அவள தூக்கிடுவாங்க பிறகு அங்க ஒர் கல்ல ஊனி அதுக்கு குங்குமம், திருநீறு பூசி அதுக்கு மாலை போட்டுருவாங்க. பேய் அதுக்கடுத்து வராது" என்றாள் ஈஸ்வரி.

________

பாட எழுப்பும் நாள் வந்தது.
காலையில் இருந்து கோடாங்கி அடிச்சிகிட்டு இருந்தான், அழுதவாறு இருந்தாள் செல்வி, 

"செவ்வந்தி எங்கள விட்டு ஏன் போன சொல்லு தாயி"ன்னு கேட்டவாறு அழுதாள் செவ்வந்தியின் தாய் பார்வதி.

காலையில் பத்து மணியாகும் பொழுது இருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்தாள் செல்வி வீட்டை விட்டு வெளியே வந்தவள் நேராக வண்ணக்குடி போட்டல் சென்றாள். கோடாங்கி அடித்த படி கோடாங்கியும் ஓடினான், மேளம் வேற அடிக்கப்பட்டது அவர்களும் பின் சென்றனர்.

சுடல துணி தேய்க்கும் வண்டி நிற்க்கும் இடம் அருகில் போய் நின்றாள், யாரையோ தேடுவது போல் பானை செய்தாள். மீண்டும் வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்தவள் அழுதாள், மீண்டும் வண்ணாக்குடி பொட்டல் சென்றாள், அங்கு செல்லும் பொழுது சுடலை விட்டு வாசலிலும் நின்று சென்றாள்.

இப்படி ஐந்து முறை சென்றாள்.

கடைசியில் கிணற்றில் விழுவதற்க்காக கிளம்பினாள், கிளம்பும் பொழுது அழுதுகொண்டே கிளம்பினாள்,

கிணற்றை அடைந்தாள், அப்பொழுதும் அழுது கொண்டேயிருந்தாள், கிணற்றை எட்டி பார்ப்பதும் கமலக்கல்லில் அமர்ந்து அழுவதுமாக தற்கொலை செய்ய தயங்கியது போல் பாவனை செய்தாள்.

செவ்வந்தியின் தாய் அழுது கொண்டிருந்தாள்.

கூட்டத்தை பார்த்தாள், சுடலை நிற்ப்பதையும் பார்த்தாள், கூட்டத்திடம் நான் போகிறேன் என கூறினாள், சுடலையிடம் நான் போகிறேன் என கண்ணால் கூறிவிட்டு கிணற்றில் குதித்தாள்.

கிணற்றில் தயாராய் இருந்த இளைஞர்கள் செல்வியை தூக்கி நாலு முனையிலும் கயிறு கட்டிய கட்டிலில் போட்டார்கள். அப்படி மேலே இழுத்து கொண்டு வந்தார்கள்.

செல்வி மயங்கிய நிலையில் இருந்தாள். கோடாங்கி அவளுக்கு திருநீறு பூசினான்,

கிணற்றின் அருகே ஒர் கல்லை நட்டார்கள் அதில் திருநீறு குங்குமம் பூசி மாலையிட்டார்கள்.

கூட்டம் எல்லாம் போய் விட்டார்கள்,
போவது போல போய் விட்டு மீண்டும் அங்கு வந்தான் சுடலை,

நடுகல்லை பார்த்தான் அந்த கல்லில் இரு கண்கள் இருந்து பார்ப்பது போல் உணர்ந்தான்.

அவன் கண்களில் நீர் பொங்கி கல்லின் மீது விழுந்தது, செவ்வந்தி என வாய் விட்டு அழுதவன் கல்லை கட்டியனைத்தான்.

அன்று முழுதும் அங்கே தூங்கி விட்டான்.

__________

"தாத்தா அந்த கல்ல எடுத்தாந்து எங்க வைக்க" என்ற வெள்ளையனின் வார்த்தையால் நினைவலையிலிருந்து விடுபட்டார் சுடலை.

"தாத்தாவோட பழைய வீட்டில கொண்டு வை" என்றார் சுடலை.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.C.om.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments