Skip to main content

மனிதம்

னிம்

எனது அடுத்த கதையை பதிவிட்டுள்ளேன், நேரமிருந்தால் படியுங்கள்.

"ஏய் சன்னாசி காலங்காத்தால கருவாட்டு வதக்கி  உன் பொண்டாட்டி கொடுத்திருக்கா போல" சைக்கிளுக்கு ஏர் பிடித்துக்கொண்டிருந்த சன்னாசியிடம் கேட்டார் பட்டாளத்துக்கார செல்லையா நாடார்.

"முதலாளி உம்ம மாதிரி நான் என்ன பொன்னி அரிசியா  சாப்பிடுறேன், லபக்குன்னு உள்ள போக, இந்த ரேஷன் அரிசிக்கு காரசாரமா கருவாட்ட கிருவாட்ட வெச்சு சாப்டா தானே உள்ளே இறங்குது." என்றான் சன்னாசி.

"காலங்காத்தால அவன் கிட்ட வம்பிழுக்கிறிகளே மாமா" என்றாள் சைக்கிள் கடை பூமாரி, 

பூமாரி வீட்டுக்காரன் ஜெயம் பட்டாளத்துக்காரருக்கு சின்னையா பேரன், அனந்தர சொக்காரன் அவன் ஊர் பள்ளிகூடத்துல சத்துணவு அமைப்பாளரா இருக்கான்.

"எம்மா பூமாரி உங்க மாமா என் வீட்டு கூரைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்து பார்த்தது மாதிரியே சொல்லுதாறு பாரும்" என்றான் சன்னாசி

 
"உனக்கும் வேலையில்ல உங்க முதலாளிக்கும் வேற வேலையில்லை என்றாள்" பூமாரி

"முதலாளி என் பொண்டாட்டி கருவாட்ட வதக்கி வச்சிறுக்கான்னு எப்படி கரெக்டா  சொன்னிங்க" என்று கேட்டான் சன்னாசி.

"காலையிலேயே கிழவி கடையில உன் பொண்டாட்டி கருவாடு வாங்கிட்டு போனா, உன் பூனை உன் பெண்டாட்டி   பின்னால கத்திக்கிட்டே போச்சு அதை இவர் பார்த்துட்டார் அதான் கருவாட்ட வதக்கி வச்சிருக்கான்னு  கரெக்டா சொல்லுதாரு" என்றாள் பூமாரி.

பட்டாளத்துக்கார செல்லையா நாடாருக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது, யாரு வீட்டில எப்ப சமையல் நடக்கு, என்ன சமையல்ன்னு கரெக்டா சொல்லிடுவார். அந்த பழக்கம் இப்ப இல்ல, 
20 வருஷத்துக்கு முன்ன இருந்துச்சி.

விறகு அடுப்பு இருந்த காலத்துல  புகைக்கூண்டுல வருத புகையை வச்சு சொல்லுவாரு.

பட்டாளத்துக்கார செல்லையா நாடார் ஏகப்பட்ட நிலத்துக்கு சொந்தக்காரர் . பட்டாளத்தில் இருந்து ரிட்டையர் ஆகி வந்த பிறகு கொஞ்சநாள் விவசாயம் பார்த்தார். மாட்டு வண்டி அவர் குறுக்குல ஏறியதிலிருந்து விவசாயம் பார்க்க முடியலை. அதுக்குப்பிறகு இந்த ஊர் மடம் தான் அவருக்கு இருப்பிடம்.

20 வருஷத்துக்கு முன்னால இந்த ஊர் மடத்தில் உட்கார்ந்து பார்த்தா  எல்லா வீட்டு புகை கூண்டும் தெரியும்.

மூணு மணிநேரம் தொடர்ந்து புகை வந்துச்சுன்னா அந்த வீட்டிலிருந்து நெல் அவிக்காக்கன்னு சொல்லிவிடுவார்.

எல்லா வீட்டுலயும்  ராவுல மட்டும் தான் சமையல் நடக்கும் காளியப்ப வாத்தியார், முத்துச்சாமி போலீஸ் வீட்டில மட்டும்தான் ரெண்டு நேரம் சமையல், காலையிலையும் புகை கூண்டுல புகை வரும்.

மாதாந்த வெள்ளி அன்னைக்கு மட்டும் எல்லா வீட்டு புகை கூண்டிலும் காலையிலே புகை வரும், அதுவும் அரை மணி நேரத்தில் போக வந்து நின்னுரும், அன்னைக்கு மட்டும் தான் எல்லா வீட்லயும் தோசைக்கு போட்டிருப்பாங்க.

மதியம்  புகை கூண்டில் புகை வந்தால் விருந்தாளி அந்த வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு அர்த்தம்.

"ஏய் உன் மச்சினன் வந்திருக்கான் போல"என சரியா கூறிடுவார்.

பட்டாளத்துக்கார செல்லையா நாடார் வீட்டில் எப்பவுமே மதிய சமையல் தான்

ஊர் மடத்திலே உட்கார்ந்துகிட்டு அவர் வீட்டு புகை கூண்டு புகைய ஆரம்பிப்பத பார்த்துகிட்டே இருப்பாரு புகைய ஆரம்பிச்சு காரக்டா ஒரு மணி நேரம் கழிச்சு போவாரு சோறு ரெடியா இருக்கும்.

இப்ப யாரு வீட்லயும் விறகு அடுப்பும் இல்லை புகைக்கூண்டும் இல்ல, சன்னாசி மாதிரி ஒரு சிலர் வீட்லதான் இருக்கு.

"ஏய் பூமாரி உங்க மச்சான் அடுத்த மாதம் ரிட்டையர்டு போறான், அவன் மகன் பம்பாயில் இருக்கதால பம்பாய் போக போறான், என்னையும் உங்க அத்தையையும் கூப்பிடுதான்" என்றார் பட்டாளத்துக்கார  செல்லையா நாடார்.

பட்டாளத்துக்காரருக்கு ஒரே ஒரு மகன் ஆறுமுகம். மதுரையில ஒரு காலேஜில புரபசரா இருக்கார், பேரன் பம்பாய்ல வேலை பாக்குறான்.

"மாமா நீங்க நெசமாவே ஊருக்கு போக போறீங்களா"  என்று கேட்டாள் பூமாரி,

"வேற வழி இல்ல பொங்கல முடிச்சுட்டு போகப்போறேன்"  என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்
பட்டாளத்துக்கார செல்லையா நாடார்.

"ஏலே  பட்டாளத்துக்கார தாத்தாவும் பாட்டியும் பம்பாய்  போகப் போறாகளாம்" என்று மகன் ரமேஷிடம் கூறினாள் பூமாரி

"அப்படியா" என்று கூறியவாறு நகர்ந்தான் ரமேஷ்.

"ஏலே தாத்தா ஊருக்குப் போறாருன்னு சொல்லுதேன் அப்படியான்னு சொல்லுத" என மகனிடம் கோபித்துக் கொண்டாள் பூமாரி.

"அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுத" என்று கூறிவிட்டு தன் சினேகிதன் அரவிந் வண்டியில் ஏறி சென்று விட்டான் ரமேஷ். 

அவனுக்கு என்ன தெரியும் மாமாவோட மதிப்பு, அது நடந்து இருபத்தைந்து வருஷம் ஆயிடுச்சி, நினைவுகளை இருபத்தை ஆண்டுகளுக்கு முன் தவழவிட்டாள்.

"ஊர்ல இருக்க புகை கூண்ட பூறாம் பாத்துக்கிட்டு அலையுதியற உம்ம சொக்காரன் வீட்டுல இரண்டு நாளா புகை வரல பாத்தியரா" என்றாள் பட்டாளத்துகார செல்லையா நாடார் மனைவி பசுங்கிளி.

"யாரு வீட்ட சொல்லுத" என்றார் பட்டாளத்துக்காரர்.

"ஜெயம் வீட்டத்தான் சொல்லுதேன்" என்றாள் பசுங்கிளி.

"ஊருக்கு ஏதும் போயிருப்பாக" என்றார் பட்டாளத்துக்காரர்.

"அதெல்லாம் எங்கும் போகல, ரெண்டு நாளா அவன இங்க தான் பார்க்கேன், அவளும் போனது மாதிரி தெரியல வீடு தொளிச்சிருக்கா" என்றாள் பசுங்கிளி.

"ஏலே ஜெயம் என்னடே செய்யுத" என கூறியவாறு பட்டாளத்துக்காரர் ஜெயம் வீட்டுக்குள் நுழைந்தார், அவர் பின்னாலே பசுங்கிளியும் உள்ளே வந்தாள்.

"மாமா வாங்க" என்றாள் பூமாரி.

"பெரியப்பா வாரும்" என கூறினான் ஜெயம்.

அவர்களுக்குள் சண்டை இருக்கது போல தெரியலை என்பதை பசுங்கிளி உணர்ந்து கொண்டாள்.

"அத்தைக்கு தண்ணி தவிக்குது" என பூமாரியிடம் கூறியவாறு அடுப்படிக்கு சென்றாள் பசங்கிளி.

தண்ணீர் குடிப்பது போல் அடுப்பை பார்த்தாள் சோறாக்கி இரண்டு நாளானது தெரிந்தது.

"அந்த காலத்தில ஜார்ஜ் கொத்தனார் கட்டிய வீடு, ஒழுகுதாடே" என கூறிய வாரு அரங்கு வீட்டுக்குள்ள போனார்.

வீட்டை பார்ப்பது போல் அரிசி சட்டியை பார்த்தார். ஒரு பொட்டு அரிசி கூட இல்லை.

"இரண்டு நாளா சோறு ஆக்குனது போல தெரியல" என பட்டாளத்துகாரர் காதில் மெதுவாக சொன்னாள் பசுங்கிளி.

"மருமகள உண்மைய சொல்லு இரண்டு நாளா என் சோறு பொங்கல" என கேட்டார் பட்டாளத்துகாரர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை" என ஜெயம் சொல்லிக்கிட்டிருக்கும் பொழுது, பூமாரியின் கண்களில் வந்த கண்ணீர் ஜெயம் பொய் சொல்வதை காட்டி கொடுத்துவிட்டது.

"மாமா அவருக்கு தரி செட்ல வேலை போய் இரண்டு மாதமாயிருச்சி, கையிலிருந்த பணமும் செலவாயிச்சி" என அழுது கொண்டே சொன்னாள் பூமாரி.

ஒரு நிமிடம் மவுனமாக நின்றிருந்த பட்டாளத்துக்காரர் "அப்போ நாங்க செத்து போயிட்டோம்ன்னு இரண்டு பேரும் நினைச்சிட்டிக அப்படி தான டே" என்றார் பட்டாளத்துக்காரர்.

"அப்படில்லாம் ஒன்னுமில்ல பெரியப்பா" என்றான் ஜெயம்.

"அப்போம் ஏண்டா ஏன் கிட்ட சொல்லல" என்றார் பட்டாள்ததுக்காரர்.

"வயத்து புள்ளகாரிய பட்டினி போட்டுருக்கியே உனக்கு அறிவிருக்கா" என ஜெயத்தை திட்டினாள் பசுங்கிளி.

பட்டாளத்துக்காரர் பையிலிருந்து பணத்தை எடுத்தார் எண்ண கூடவில்லை குறைந்தது இரண்டாயிரம் இருக்கும், அப்படியே ஜெயத்தின் கையில் திணித்தார்,

"வேண்டாம் பெரியப்பா" என்றான் ஜெயம்.

"நீ முதல்ல இந்த ரூபாவை பிடி" என்றாள் பசுங்கிளி.

ஜெயமும் வாங்கி கொண்டான்.

அன்னையில இருந்து இன்று வரை பல தடவை பட்டாளத்துக்காரர் பூமாரிக்கு உதவி செய்துள்ளார்.

பட்டாளத்துக்கரர் செல்லையா நாடார் பம்பாய் போய் இரண்டு வருஷமாச்சி, போன வருஷம் பட்டாளத்துக்காரர் வீட்டம்மா பசுங்கிளி உடல் நலம் சரியில்லாம போய் ஊருக்கு வந்து இறந்தும் போயிட்டாங்க.

பட்டாள்ததுக்காரர் மறுபடியும் பம்பாய்க்கே வந்துட்டார். ஆனால் பட்டாளத்துக்காரர் பேரனை ஓராண்டு காலம் அமெரிக்கா அனுப்பியது அவன் கம்பெனி.

மகனும் பேரனும் அமெரிக்க சென்று விட பட்டாளத்துக்காரர் செல்லையா நாடார் மட்டும் பம்பாயில் இருந்தார். ஊருக்கு போய் விடக்கூடாது என மகன் கண்டிப்பாக சொல்லியிருந்தான்.

பம்பாய் வீடு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது, அவர் மகனுக்கு சொந்தமான வீடு.

வீடு பராமரிக்காமல் இருந்தால் பாழாகிவிடும் என்பதால் பட்டாளத்துக்காரரை பம்பாயில் இருக்க வைத்து விட்டான் அவரது மகன்.

பூமாரி மகனும் நல்ல வேலை கிடைத்து ஹைதராபாத்தில் இருந்தான். அவனுக்கு சமைத்து போட அவனுடனே இருந்தாள் பூமாரி.

இரண்டு நாளுக்கு ஒரு முறை பூமாரியிடம் போனில் பேசிவிடுவார் பட்டாளத்துக்காரர். "அம்மாவை கூட்டிட்டு பம்பாய் வா" என பூமாரியின் மகனிடம் கூறுவார்.

"பம்பாபாய் கூட்டிட்டு போடா"" என பல முறை கேட்டாள் பூமாரி.

கேட்க்கும் போதெல்லாம் "எனக்கு நேரமில்லமா" என கூறி விடுவான் ரமேஷ்.

இரண்டு நாளுக்கு ஒரு முறை வரும் போன் நான்கு நாளாகியும் வரவில்லை.

"டேய் தாத்தா போன் போட்டு நாலு நாளாயிருச்சி அவருக்கு போன் போட்டு தா" என மகனிடம் கேட்டாள்.

போன் போட்ட ரமேஷ்." தாத்தா செல் ஸ்விச் ஆப்ன்னு வருது, செல் ரிப்பேர் ஆகியிருக்கும் " என்றான் ரமேஷ்.

செல்லுக்கு எந்த கால் வந்தாலும் பட்டாளத்துகாரர் போன் என எதிர் பார்ப்போடு எடுப்பாள் பூமாரி.

பட்டாளத்துக்காரரர் பூமாரியிடம் பேசி பத்து நாளை தாண்டியது,

"டேய் தாத்தா செல் எடுக்கல, இருக்கட்டும் அவர் மகன் ஆறுமுகம் பெரியப்பா கிட்டயாவது போன் போடு" என மகனிடம் கேட்டாள் பூமாரி.

"எம்மா அமெரிக்காவில் இது இரவு அவர்கள் தூங்கி கொண்டிருப்பார்கள் தாத்தாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது மனச குழப்பாத" என்றான் ரமேஷ்.

இரண்டு வாரம் கடந்து விட்டது" டேய் கண்டிப்பா ஆறுமுகம் பெரியப்பாவிற்க்கு போன் செய்தே ஆக வேண்டும்" என்றாள் பூமாரி.

வேறு வழியின்றி போன் போட்டு அம்மாவிடம் போனை கொடுத்தான் ரமேஷ்.

"மச்சான் மாமா இரண்டு நாளுக்கு ஒருக்கா போன் பேசுவார், அவர் கடைசியா பேசி இரண்டு வாரம் ஆகிவிட்டது, எனக்கு பயமா இருக்கு" என்றாள் பூமாரி.

"ஆமாம் நானும் இரண்டு முறை போன் செய்தேன். அவர் போன் ஸ்விச் ஆப் என்று தான் வருகிறது, அவருக்கு அதிகம் நன்பர்கள் இருக்கிறார்கள், அவருக்கு ஹிந்தி நன்றாக தெரியும் அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது" என கூறினார் ஆறுமுகம்.

மூன்று வாரம் ஆகிவிட்டது,"என்னை கண்டிப்பாக பம்பாய் அழைத்து செல்" என மகனிடம் கெஞ்சி கேட்டாள் பூமாரி.

வேறு வழியின்றி பூமாரியை அவள் மகன் அழைத்து சென்றான்.

பம்பாயின் ஊரின் ஒதுக்குபுறம் உள்ள பெரிய அப்பார்ட்மண்ட், அங்கு நின்ற கார்களை வைத்தே, அங்கு குடியிருப்பவர்கள் யார் என தெரிந்து கொள்ளலாம், ஐம்பது லட்சத்திற்க்கு குறைவான விலையில் கார்களே இல்லை.

அப்பார்ட்மென்டை அடைந்து ஏழாவது மாடியை நோக்கி பூமாரியும் அவள் மகனும் லிப்டில் சென்று கொண்டிருந்தார்கள்.

"கடவுளே மாமாவுக்கு ஏதும் ஆகியிருக்க கூடாது" மனதுக்குள் எல்லா இறைவனிடமும் பிரார்த்துக்கொண்டே வந்தாள்.

அவர் வீடு அமைந்துள்ள பதினைந்தாம் எண் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்தினான் ரமேஷ்.

"மாமா மாமா" எனக்கூறி கதவை தட்டினாள் பூமாரி.

கதவின் கை புடியை பிடித்த ரமேஷ் "வீடு திறந்து தான் இருக்கு" என கூறியவாறு கை புடியை திருக்கினான் கதவு திறந்தது.

பூமாரியும் ரமேஷும் உள்ளே சென்றார்கள். ஹாலில் TV ஓடிக்கொண்டிருந்தது.

சோபாவில் சாய்தவாறு பட்டாளத்துக்காரர் இருந்தார்.

பிணமாக.

நன்றி.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.Com.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments