Skip to main content

ஏக்கம்

ஏக்கம்


இந்த அம்மாவாசை வந்தா போயிடும்ன்னு நம்பிக்கையில் இருந்தார் லிங்கம். 

அம்மாவாசையும் வந்து போயிடுச்சி. ஆனால் தொண்டை குழியில் சின்ன துடிப்புடன் அருணகிரி நாடார் உடலில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டு தான் இருக்குது.

"ஏதோ ஒர் ஏக்கம் அவர் தொண்டையில் தவிக்குது" என்றார் ரத்தினம் நாடார். அது என்னன்னு யாருக்கும் புரியல.

சாப்பாடு நின்னு ஒரு வாரமாச்சி,

போன வாரமே போயிடும்ன்னு நெனைச்சி வந்த மூத்த மகள் செல்லதாய், மாடு கண்ண பார்க்க ஆளில்லன்னு போயிட்டா.

அருணகிரி நாடாருக்கு மூனு பிள்ளைக. மூத்தவ செல்லதாய சுரண்டையில கட்டி குடுத்திருக்கு, அவமகளை தான் லிங்கம் கட்டியிருக்கார்.

லிங்கம் அருணகிரி நாடாரின் ஒரே மகன்.
இன்னொருத்தி ரஞ்சிதம். உள்ளுர்லே கட்டி கொடுத்திருந்தார். மனைவி இறந்து பத்து வருஷமாச்சி.

அருணகிரி நாடார் அதிக நிலபுலத்துக்கு சொந்தகாரர்.

இன்னைக்கு அவர் கிட்ட இவ்வளவு நிலம் இருக்குன்னா அதுக்கு காரணம் வக்கில் இராமநாதய்யர் தான்.

இராமநாதய்யர் தான் வழக்க ஜெயிச்சி கொடுத்து, கை விட்டு போன அம்புட்டு நிலத்தையும் மீட்டு கொடுத்தார்.

அவருக்கு பூர்விகமான சொத்துகளை வித்து கோவிந்த பேரியில அருணாசல முதலியார் வயலை வாங்கியிருந்தார்.

வயல வாங்கின பிறகு, இந்த நிலத்தில எனக்கு பங்கிருக்குன்னு அருணாசல முதலியார் அண்ணன் பழனி முதலியார் சண்டைக்கு வந்தார், அப்புடி கோர்ட்டுக்கும் போய்ட்டார். தென்காசி கோர்ட்ல கேஸ், போட்டுட்டார்.

அருணகிரி நாடாருக்கு கோர்ட்டுன்னா என்னன்னே தெரியாது.பழனி முதலியார் படிச்சவர். அவருக்குறிய விபரம் அருணகிரி நாடாருக்கு கிடையாது.

தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டதாக நினைத்தார், ஒரு வழியா முத்துசாமி பிள்ளை தான் இராமநாத அய்யர்கிட்ட கொண்டு போய்விட்டார்.

கேஸ் எட்டு வருஷம் நடந்துச்சி, மூனு மாதத்திற்க்கு ஒரு வாய்தா வரும்,

இந்த எட்டு வருஷத்தில இருபது தடவைக்கும் மேல இராமநாத அய்யர பார்த்திருப்பார்.

போகும் போதெல்லாம் மாட்டு வண்டியில தான் போவார், பல தடவ லிங்கத்தையும் கூட்டிட்டு போவார், அப்போ லிங்கம் சிறு பையன்.

வயல்ல வெளஞ்ச அத்தனை பொருளும் மாட்டு வண்டியில போகும். கோர்ட் வாழ்வு அருணகிரி நாடாருக்கு வியப்பாய் இருந்தது. 

இராமநாதய்யர் நல்ல வளத்தியா செகப்பா இருப்பாரு. அவர் நெற்றியில் உள்ள குங்கும பொட்டு காலையில் வைத்தது போலவே மாலை வரை அழியாது இருக்கும். அவர் முகமும் அப்படி தான். அவர் முகம் களைப்படைந்து பார்த்ததில்லை.

அவரிடம் பேசவே அனைவரும் பயப்படுவர் ஆனால் இராமநாதய்யர் அருணகிரி நாடரிடம் சகஜமா பேசுவார். "நாடார உம்ம நிலத்த யாரும் ஒன்னும் செய்ய முடியாது.கேஸ் உமக்கு தான் ஜெயிக்கும் " என்பார்.

சொன்னது போல ஜெயிச்சும் கொடுத்தார்.

தீர்ப்பு அன்று லிங்கமும் அருணகிரி நாடாருடன் கோர்டுக்கு போயிருந்தான்.

"நாடார நிலம் உமக்கு தான் சொந்தம்ன்னு தீர்ப்பு வந்திருச்சின்னு" இராமநாதய்யர் சொன்னது தான், அருணகிரி நாடாருக்கு கண்ணீரே வந்துருச்சி.

அவருக்கு இராமநாதய்யர் வக்கிலா தெரியல, அவர் தினமும் கும்பிடும் திருச்செந்தூர் முருகனா தெரிஞ்சார்.

அதன் பிறகு வயல் காட்டுல எது வெளஞ்சாலும், அய்யர் வீட்டுக்கு  போய்விடும்.

லிங்கத்தின் மகனுக்கு ராம்குமார்ன்னு அய்யரை நினைத்து பெயர் வைத்தார்.

அய்யர் இறந்தும் நாற்ப்பது வருடம் ஆச்சிது.அருணகிரி நாடாருக்கு வயசு என்பதை தாண்டியிருச்சு.

போன தை பொங்கலுக்கு கரும்ப கடிச்சி தின்னவரு.

ஒரு மாசத்துக்கு முன்பு காய்ச்சல்ன்னு படுத்தார்.

ஆஸ்பத்திரியில கொண்டு ஊசி போட்டார் லிங்கம்.

காய்ச்சல் போயிருச்சி, ஆனா ஆளு எந்திக்கல.

அவர் ஜீவன் சங்கடபாம பிரியனும்னு லிங்கம் நினைச்சார்.

வார செவ்வாய் கிழமை கொடி ஏறி திருவிழா ஆரம்பிச்சிடும்.

அப்போ செத்துட்டார்ன்னா ரெம்ப சங்கடமாயிரும். திருவிழா காலத்தில சடலத்தை ரெம்ப நேரம் வச்சிருக்க விடமாட்டாங்க.

குழம்பியவாறு உட்கார்ந்திருந்தார் லிங்கம்.

செல்லசாமி வாத்தியார் மகன் திணேஷ் நாலஞ்சி பையன்களோடு விட்டுக்குள் வந்தான்.

"மாமா பொங்கலுக்கு நாடகம் வச்சிக்கோம் உங்கள தான் குத்துவிளக்கு ஏற்ற போட்டிருக்கு, கண்டிப்பா வரனும்ன்னு" கூறி, நோட்டீஸையும் டொனேசன் புக்கையும் கொடுத்தான்.

"மாமா கண்டிப்பா வாரேன், ஆயிரம் ரூபாய் எழுதிக்கோ"என, கூறியவாறு பையிலிருந்து 1000 ரூபாவை எடுத்து கொடுத்தார்.

அந்த பையன்கள் சென்ற உடன் கையிலிருந்த நோட்டீஸை பார்த்தார்,

லிங்கத்திற்க்கு தான் அந்த காலத்தில் நாடகம் நடித்த ஞாபகங்கள் வந்தது.

"ஏய் லிங்கம் மாட்ட பத்திட்டு வா" பால் பண்ணையில் வேலை செய்யும் பொன்னுச்சாமியின் சத்தம் அருணகிரி நாடாரை எழுப்பியது,

ஆனால் வீட்டு திண்னையில் படுத்திருந்த லிங்கத்தை எழுப்பவில்லை.

"துரை இராத்திரி பூரம் நாடகம் அது இதுன்னு அலையுதது விடிய காலம் எந்திக்காம தூங்குதது, ஏலே எந்திச்சி மாட்ட பத்திட்டு போ" என திட்டியவாறு லிங்கத்தை எழுப்பினார்.

ஒத்திக்கை நடந்த ஒரு மாசமும் லிங்கத்திற்க்கு திட்டுதான். 

"நாடகம் தான உனக்கு சோறு போடப்போகுது, ஒழுங்கா வேலைய பார்த்தோமா கஞ்ச குடிச்சம்ன்னு இருல" என திட்டுவார்.

அருணகிரி நாடார் திட்டுவதை லிங்கம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை பழகிபோனது.

பொங்கலின் எட்டாம் நாள் நிகழ்ச்சியில் நாடகம் நடைபெற்றது.

புழுக்கம் அதிமானதால் பொட்டல் வரை போய்ட்டு வருவோம்ன்னு அருணகிரி நாடார் பொட்டலுக்கு வந்தார். அங்கு நாடக பார்க்க மக்கள் பொட்டலில் கூடியிருந்தார்கள்.

நாடகம் துவங்க தயாரானது, சரி என்ன தான் நடிக்காங்கன்னு பார்த்துட்டு போவோம்ன்னு அங்கே அமர்ந்தார்.

நாடகம் முதல் காட்சியில் அம்மன் படத்தின் முன்பு அனைத்து நடிகர்களும் வணங்குவது போல் காட்சி இருந்தது.

எல்லா நடிகர்களும் மேக்அப்பில் இருந்தார்கள்.

அனைவரும் மேக்கப்பில் இருந்ததால், அருணகிரி நாடாருக்கு மகன் எங்கு நிற்க்கிறான் என தெரியவில்லை,

"ஏலே முருக லிங்கம் எங்கல நிற்க்கான் என்றார்"அருணகிரி நாடார்.

"பெரியப்பா அந்த வக்கிலு யாரு லிங்கண்ணன் தான" என்றான் முருகன்.

வக்கில் வேடத்தில் நின்று கொண்டிருந்தான் லிங்கம்.

முழு நாடகத்தையும் பார்த்தார் அருணகிரி நாடார்.

எட்டாவது வரை மட்டுமே படித்த லிங்கம் பிரமாதமாக வக்கிலா நடித்தான்.

நடகம் முடிந்து வந்து திண்ணையில் படுத்திருந்தான் லிங்கம்.

"ஏய் லிங்கம் மாட்ட பத்திட்டு வா" என கூறிய பொன்னுசாமி, லிங்கத்தை எழுப்ப முயன்றான்.

"ஏய் அவன ஏன் எழுப்புற அவனே நாடகம் நடிச்சிட்டு வந்து படுத்திருக்கான், போ நான் மாட்டை பத்திட்டு வாரேன்" என்றார்.

லிங்கம் எழுந்து மாட்டை அவிழ்க்க போனான்.

"ஏலே நீ போய் தூங்கு நான் பண்னைக்கு போறேன்" என்று கூறி கிழம்பினார்.

"சரி நேற்று நீங்களும் நாடகம் பார்க்க வந்தது மாதிரி தெரியுது" என்றாள் அருணகிரி நாடார் மனைவி பவுன் தாய்.

"ஆமா பார்த்தேன், உன் மகன் வக்கிலா நல்லா நடிச்சா, இராமநாதய்யர பார்த்தது மாதிரி இருந்தது என்றார்.

நிகழ்காலத்திற்க்கு மீண்ட லிங்கம் அருணகிரி நாடார பார்த்தான், அவர் தொண்ட குழி துடித்துக்கிட்டிருந்தது,

அருணகிரி நாடாரின் ஏக்கம் லிங்கத்திற்க்கு இப்பொழுது புரிந்தது.

"டேய் ராம்குமார் " என மகனை அழைத்தார் லிங்கம்.

"என்னப்பா" என்றவாரு ராம்குமார் வந்தான்.

"நீ தச்சி வச்சிருக்க கோட் கவுன போட்டுட்டு வா" என்றான் லிங்கம்.

"என்ட்ரோல் பண்ணுவதுக்கு முன்பு r கோட் கவுன் போடக்கூடாது" என்றான் ராம்குமார் .

ராம்குமார் வக்கிலுக்கு படித்து முடித்திருந்தான். அடுத்த வாரம் பார் கவுன்சில்ல பதிவு பண்ண போறான். அதற்க்கான கோட் கவுனை வாங்கி வீட்டில் வைத்திருந்தான்.

அதை அணிந்து வருமாறு தான் லிங்கம் கூறினார்.

"நான் சொல்வதை செய்" என்றார் லிங்கம்.

அறைக்குள் சென்ற ராம்குமார் கோட் கவுன் அணிந்து வந்தான்.

அவனை அருணகிரி நாடார் அருகில் அழைத்து சென்றார் லிங்கம்.

"ஏப்போ உங்க பேரன் வக்கிலாயிட்டான் பாருங்க"என்றார் லிங்கம்.

அருணகிரி நாடார் ராம்குமாரை பார்த்தார், அவர் கண்ணில் இருந்த ஏக்கம் மறைந்தது, அவர் கண்கள் ஏதோ ஒர் செய்தியை கூறியவாறு மூடியது.

தொண்டையில் துடித்த துடிப்பும் நின்றது.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.C.om.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments

Popular posts from this blog

மனிதம்

ம னி த ம் எனது அடுத்த கதையை பதிவிட்டுள்ளேன், நேரமிருந்தால் படியுங்கள். "ஏய் சன்னாசி காலங்காத்தால கருவாட்டு வதக்கி  உன் பொண்டாட்டி கொடுத்திருக்கா போல" சைக்கிளுக்கு ஏர் பிடித்துக்கொண்டிருந்த சன்னாசியிடம் கேட்டார் பட்டாளத்துக்கார செல்லையா நாடார். "முதலாளி உம்ம மாதிரி நான் என்ன பொன்னி அரிசியா  சாப்பிடுறேன், லபக்குன்னு உள்ள போக, இந்த ரேஷன் அரிசிக்கு காரசாரமா கருவாட்ட கிருவாட்ட வெச்சு சாப்டா தானே உள்ளே இறங்குது." என்றான் சன்னாசி. "காலங்காத்தால அவன் கிட்ட வம்பிழுக்கிறிகளே மாமா" என்றாள் சைக்கிள் கடை பூமாரி,  பூமாரி வீட்டுக்காரன் ஜெயம் பட்டாளத்துக்காரருக்கு சின்னையா பேரன், அனந்தர சொக்காரன் அவன் ஊர் பள்ளிகூடத்துல சத்துணவு அமைப்பாளரா இருக்கான். "எம்மா பூமாரி உங்க மாமா என் வீட்டு கூரைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்து பார்த்தது மாதிரியே சொல்லுதாறு பாரும்" என்றான் சன்னாசி   "உனக்கும் வேலையில்ல உங்க முதலாளிக்கும் வேற வேலையில்லை என்றாள்" பூமாரி "முதலாளி என் பொண்டாட்டி கருவாட்ட வதக்கி வச்சிறுக்கான்னு எப்படி கரெக்டா  சொன்னிங்க" என்று கேட்டான் சன்னா...

மூணு கால் நாய்

மூணு கால் நாய் "மூணு கால் நாய்,  என்ற பெயரில் என் சிறு கதை. ஒத்த நாள் கூட பிரிந்திருந்ததில்லை. உலகத்தை விட்டுப் போய் இன்னோட மூணு நாளாச்சு. மனதளவில் கொலஞ்சி போயிருந்தார் உலகநாதன். பதினைந்து நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கும்போதே கிறுகிறுன்னு வருதுன்னு சொல்லி கீழே விழுந்தா.  தென்காசி திருநெல்வேலி மதுரைன்னு ஆம்புலன்ஸில் சுத்தி கடைசில  பொணமாத்தான் இலஞ்சிக்கு வந்தாள் கோமதி. நோய்க்கு புரியாத பேர வச்சிருக்கான், நோய கண்டுபுடிக்க மெஷின் வச்சிருக்கான், ஆனால் நோய குணமாக்குற மருந்து மட்டும் இல்லைங்கிறான்.  உலகநாதன் பதினைந்து நாள் போராடி பார்த்தார், கடைசியில ஒன்னும் நடக்கல இறந்து போகக் கூடிய வயதும் இல்லை. ஆடி மாசம் வந்தா ஐம்பத்தைந்து வயசு ஆகுது. சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னு பிறந்தாள். அதனாலே கோமதின்னு பெயர் வச்சாங்க. மூச்சி விடுததுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட புருஷன நினைச்சி தான் புலம்பினா. "உங்க அப்பாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துட்டேன், அவர நெனைச்சா பாவமா இருக்குடா, அவர சோத்துக்கு கையேந்த வச்சிராதிங்கடா" என கை எடுத்து கும்பிட்டு கேட்டாள். ____ உலகநாதன் வேளாண் துறைய...

மாட்டு வண்டி பாதையிலே

மாட்டு வண்டி  பா தை யி லே தென்றலின் தலைவாசல் பாம்புக்கோவில் சந்தை, குற்றாலத்திற்க்கு ரயிலில் வருபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்துக்குள்ள வண்டி வரும் பொழுது தென்றல் நம்மை வரவேற்க்கும். மெல்லிய தூறலும், ஜிலுஜிலு காற்றுடன் இதமான காலையாக இருந்தது அந்த காலை நேர பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். பாம்புக்கோவில் சந்தையில் ரயில் இரண்டு நிமிடம் மட்டும் தான் நிற்க்கும். எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இறங்கினார் ஜெயச்சந்திரன் அவர் பின்னாலே இறங்கிய உமா "சித்தப்பா போயிட்டு வரேன்"என்றார்.  "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் விடைகொடுத்தார் ஜெயச்சந்திரன். சொந்த பெரியா மகன் புள்ள, அனந்தர சொக்காரன் மகா. அப்படியிருந்தும் நின்று பேச நேரம் இல்லாதது போல் வேகமாக வெளியே நடந்தார் ஜெயச்சந்திரன். உண்மையிலே நேரம் இருந்தாலும் அவர் இப்படித் தான் செய்வார். இது அவர் குணநலம்,  வாழ்க்கை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என எண்ணுபவர். இது தான் தனி மனிதனுடைய வெற்றிக்கான பார்முலா  என்று வாழ்ந்து வருபவர்.  "நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை பற்றி அசை போட்டால் எதிர்...