Skip to main content

கிழத்தி

கிழத்தி
"கிழத்தி" என்ற எனது சிறுகதை.

"சந்திரன்னே அந்த ஆட்டோவில் இருந்து யாரோ உங்கள கூப்புடுதாங்க பாரு" என்றார் கோர்ட் கேண்டின் பழனி.

கையில் இருந்த சிகரெட்டை புகைத்தவாரு ஆட்டோ அருகில் சென்று ஆட்டோவை எட்டிப்பார்த்தார் வக்கில் குமாஸ்தா சந்திரன்.

"ஏவ் முத்துச்சாமியா, நல்லா இருக்கியரா" என்றவர், "இன்னைக்கு என்ன வந்திருக்கீங்க " என கேட்டார் சந்திரன்.

"இன்னைக்குத்தான் வாய்தா" வண்டிக்குள் இருந்தபடியே கூறினார் முத்துசாமி.

"கொஞ்சம் வழி விடுங்க" என கூறி சந்திரனைக் கொஞ்சம் விலக்கினாள் முத்துசாமியின் மனைவி குருவம்மாள்.

மூணு இட்லி ஒரு வடையும் அவள் கையிலிருந்த தட்டிலிருந்தது.

"ஏன் குருவம்மக்கா  வீட்ல சாப்பிட்டுட்டு வந்தருக்கலாமில்ல இங்க கேண்டில்ல வாங்கிட்டு வார" எனக் கேட்டார் சந்திரன்.

"லேட் ஆயிடுச்சுய்யா அதான் வந்துட்டோம்" என்று கூறியவாறு இட்லியை பிய்த்து முத்துச்சாமியின் வாயில் ஊட்டி விட்டாள்.

முத்துச்சாமியின் வாயிலிருந்து வரும் எச்சியை அவ்வப்போது தனது முந்தானையாள் துடைத்து விட்டாள்.

"சரி நான் வரேன்" என கூறிவிட்டு மீண்டும் கேண்டினுக்குள் நுழைந்தார் சந்திரன்.

_____

ஆட்டோ கோர்ட்டின் வாசல் முன் சென்று நின்றது. ஆட்டோவிலிருந்து மெதுவாக இறங்கினார் முத்துச்சாமி.

ஒற்றைக்காலில் இறங்கிய முத்துசாமியை, கேண்டினிலிருந்த அனைவரும் பரிதாபகமாக பார்த்தார்கள்.

"ஏய் பழனி இன்னைக்கு ஒரு ஆக்ஸிடென்ட்ல இப்படி ஆயிட்டார். 
ஒரு நேரத்துல பெரிய வஸ்தாவி, கொஞ்ச நஞ்ச அடிதடி கேஸா இருந்துச்சி" என்றார் சந்திரன்.

சந்திரன் இந்த கோர்ட்டின் தலவாசல் மாதிரி, அவருக்கு அறுபத்தாரு வயசாகுது, பதினைஞ்சு வயசுல குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தார்.

ஐம்பது வருஷ கோர்ட் வரலாறு அருக்குதெரியும்.

_____

"சந்திரன்னே அந்த வண்டியில பின்னால இருக்கா பாரு, அது தான் அந்த புள்ள" என்றார் தேங்காய் கடை கணேஷன்.

"அடுத்த வாய்தாவில் கண்டிப்பா பிள்ளைய கூப்பிட்டுட்டு வரனும்ன்னு ஜட்ஜ் சொன்னாரு. இவ கண்டிப்பா பிள்ளைய கூட்டிட்டு வர மாட்டான்னு அப்பொழுதே சொன்னேன், அதே போல் நடந்திருச்சிப்பா" என்றான் கணேஷன் மகன் சரவணன்.

"விடு தம்பி" என்றார் சந்திரன்.

"அவன் பிள்ளை மேல கொள்ள பாசம் வைத்திருக்கான், இன்னைக்கு பிள்ளைய பார்த்திரலாம்ன்னு ஆசையிலயிருந்தாம்னே"
என்றார் கணேஷன்.

வண்டியை விட்டு இறங்கிய ரம்யாவும் அவள் அப்பாவும் கோர்ட்டுக்குள் சென்றார்கள்.

--------------

"இரண்டு பார்ட்டியும் இருக்க மாதிரி ஏதாவது கேஸ் இருக்கா" என்று கேட்டார் லோக் அதாலத் கிளர்க் அப்பாஸ்.

"சார் HMOP 27/19ல ரெண்டு பார்ட்டியும் வந்திருக்காங்க" என்றார் சந்திரன்.

"சரி வரச்சொல்லுங்க" என்றார் அப்பாஸ்.

அப்பாஸ் அருகில் சென்ற ரம்யா 
"சார் எங்க வக்கில் வந்துக்கிட்டு இருக்கார் கொஞ்சம் பொறுங்க" என்றாள்.

இதை பார்த்துக்கொண்டிருந்த லோக் அதாலத் நீதிபதி
"உங்கள் வக்கில் வரட்டும்மா முதல்ல நீங்க வாங்க, 
லோக் அதாலத்துல கேஸ் நடத்தப்போறதில்ல.பேசி முடிக்க வழியிருக்கான்னு பார்க்கிறது தான்" என்றார்.

தயங்கியவாறு உள்ளே வந்தாள் ரம்யா.

முன்னால் இருந்த சேர்களில் இருவரையும் உட்க்காருமாறு கூறினார் நீதிபதி.

இருவரும் அமர்ந்தார்கள்.

"என்னம்மா பிரச்சானை" என கேட்டார் நீதிபதி.

"எனக்கு டைவர்ஸ் வேணும்" என்றாள் ரம்யா.

"டைவர்ஸ் வேணும்ங்கிறது உன் கேஸ், நான் கேட்ப்பது உங்களின் பிரச்சனையை" என்றார் நீதிபதி.

"என்னால இவனோடு வாழ முடியாது" என்றாள்.

"நீங்க வீட்டுல எப்படி வேணும்னாலும் பேசியிருக்கலாம், இங்கே அவன், இவன்னு பேசக்கூடாது" என்றார் நீதிபதி.

"எதிர் காலத்தை பற்றி எந்த திட்டமும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார். அத சொன்னதால பிரச்சனை சார்" என்றாள் ரம்யா.

"எனக்கு புரியல" என்றார் நீதிபதி.

"சார் நாங்கள் கம்யூட்டர் பீல்டில் வேலை செய்கிறேம். இருவருக்கும் மாதம் இரண்டு லட்சம் மேல் சம்பாதிக்கிறோம்" என்றவள் 

"மாதம் ஐம்பதினாயிரம் செல்வானாலும் ஒன்னரை லட்சம் மீதமிருக்கு. அதை வருவாய் வரும் வகையில் மூதலீடு செய்ய கூறினேன். அதற்க்கு சம்மதிக்க மறுக்கிறார் என்றாள் ரம்யா.

நீதிபதி சரவணனை பார்த்தார்.

"இல்லை சார் நான் அவள் கூறிய படி தான் நடந்து வருகிறேன். என் தந்தையின் வியாபாரத்திற்க்கு முதலீடு செய்தேன், அங்க தான் பிரச்சனை ஆரம்பித்தது" என்றான் சரவணன்.

"சரி அவர் அப்பா தொழிலுக்கு முதலீடு செய்யட்டும், அதில நஷ்டமாகிட்டா என்ன செய்ய" என்றாள் ரம்யா.

"ரோட்டுல தேங்காய போட்டு வித்து அந்த லாபத்தில குடும்பத்தையும் காப்பாற்றி என்னை படிக்க வைத்தார். அவர் மேல நம்பிக்கையிருக்கு" என்றான் சரவணன்.

"சரிம்மா நீ முதலீடு செய்ய சொல்கிறாயே அதில் நஷ்டமாகாதா?" என கேட்டார் நீதிபதி.

"ஆகாது நம்பிக்கையிருக்கு" என்றாள் ரம்யா.

"உனது நம்பிக்கை போல் அவருக்கும் அவர் அப்பாவின் மேல்  நம்பிக்கையிருக்கு" என்றார் நீதிபதி.

"நான் மனம் மாற மாட்டேன் எனக்கு விவகாரத்து வேண்டும்" என்றாள் ரம்யா.

"இது முடிவுக்கு வராது அடுத்த கேஸ கூப்பிடு" என அப்பாஸிடம் கூறியவர், "உங்கள் வக்கில் வரட்டும் பிறகு விசாரிப்போம்" என கூறி வெளியில் இருக்க சொன்னார்.

----------------

முத்துச்சாமி மனைவியை பிடித்தவாறு நொண்டியபடி வந்தார்.

உட்கார வையும்மா என குருவம்மாளிடம் கூறினார் நீதிபதி.

முத்துச்சாமியின் வக்கில் ராமதாஸ் கேஸ் கட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்தார் 

"எல்லாத்தையும் கால்குலேட் பண்ணினா இண்டே கால் லட்சம் வருது, இண்டு லட்சத்தி பதிணைந்தாயிரம் கொடுத்தால் கேஸ முடிச்சிக்கிடலாம்" என்றார்.

ஒரு வழியாக இரண்டு லட்சத்தி ஐயாயிரம் ரூபாய் என்று முடிவு செய்தார்கள்.

"இதில் ஒரு லட்சத்தை டெப்பாசிட்ல போடுவோம் மீதுமுள்ள தொகையை எடுத்துக்கட்டும்" என்றார் நீதிபதி.

"அய்யா முழு தொகையையும் எடுக்க மாதிரி செய்யுங்க" என்றாள் குருவம்மா.

"டெப்பாசிட் இருந்தால் உங்களுக்கு தான நல்லது, அய்யாவின் கண்ணுக்கு பின்னால உபயோகபடும்லா" என கேட்டார் நீதிபதி.

"அய்யா எனக்கு அந்த பணம் வேண்டாம்" என்றவள். "
அந்த ரூபாய்ல கேரளாவில போய் செயற்க்கை கால் வாங்கி மாட்டனும், இரண்டு லட்சம் வரை ஆகும்ன்னு சொல்லுதாங்க அதுக்கு ஏற்பாடு செய்யுங்க புன்னியம்மா போகும்" என்றாள் குருவம்மாள்.

"அப்பாஸ் அவர வெளியே இருக்க வை" என சொன்னார் நீதிபதி.

முத்துச்சாமியை வெளியே உள்ள சேரில் அமர வைத்தார்கள்.

குருவம்மாவை அருகில் அழைத்தார்
"அம்மா உங்கள் வீட்டுக்காரருக்கு என்பது வயசாயிருச்சி, அவர் காலம் இன்னும் கொஞ்ச நாள் தான். ஆனால் நீங்கள் அப்படியல்ல. உங்கள் வாழ்க்கைக்கு தான் பணம் தேவை, அதை டெப்பாசிட் செய்துடுவோமா" எனக்கேட்டார் நீதிபதி.

"இல்ல சாமி என் வீட்டுக்காரர் ராசா மாதிரி வாழ்ந்வர், அவர் நொண்டிக்கிட்டு நடக்கத பார்க்கையில என் உயிரே போகுது, அவருக்கு செயற்க்கை கால் தான் வேணும்" என்றவள்.

"நான் கல்யாணமானதிலிருந்து வேலைக்கே போனதில்லை, என் கணவர் தான் உழைத்து சோறு போட்டு காப்பாற்றினார்.

அவர் வியர்வையில் நான் சாப்பிட்டது பெருமையாக நினைத்தேன், ஆனால் அவர் ரத்தத்தில் நான் சாப்பிட எனக்கு மனமில்லை" எங்கள கட்டாய படுத்தாதிங்க என்றாள் குருவம்மா.

"இந்தம்மா சொல்லுத மாதிரி செய்யவா என பெரியவரிடம் கேட்டு அப்படியே முடிவு செய்யுங்கள்" என அப்பாஸிடம் கூறினார் நீதிபதி.

"அய்யா அந்த டைவர்ஸ் வழக்கை என்ன செய்ய" என கேட்டார் அப்பாஸ்.

நீண்ட மவுனத்திற்க்கு பின் 
"அந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை அவர்களை போகச் சொல்லி விடு" என்றார் நீதிபதி.

எழுதியவர்.
R.V.நல்ல பெருமாள்.B.C.om.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments